
சென்னை,
அ.தி.மு.க. மக்கள் மனதிலிருந்து மெல்ல மறைந்துகொண்டிருக்கிறது என்ற முதல்-அமைச்சர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
"பொறாமையில் பொங்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தி.மு.க. தனது ஆட்சி அதிகாரத்தை, பண பலத்தைப் பயன்படுத்தி, ஜனநாயகப் படுகொலை செய்து இடைத்தேர்தலை சந்தித்ததால்தான் அ.தி.மு.க. இடைத்தேர்தலை புறக்கணித்தது. இன்றும் தமிழக மக்களோடு களத்தில் நிற்பது அ.தி.மு.க.தான். மக்கள் நம்புவதும் அ.தி.மு.க.வை மட்டும்தான்.
உண்மையில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சி, நமது மாநிலத்தை கற்காலத்துக்கே கொண்டு சென்றுவிட்டது. மாநிலம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, ரவுடிகள் அராஜகம் என மோசமான நிலை நிலவுகிறது.
தேர்தலில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்ட தி.மு.க. மீது பொதுமக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதையெல்லாம் மறைப்பதற்கும், திசைதிருப்பவும் அ.தி.மு.க குறித்து தொடர்ச்சியாகப் பேசிவருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2021 தேர்தலிலேயே தி.மு.க. நூலிழையில்தான் வெற்றிபெற்றது என்பதை மறந்துவிட வேண்டாம். 2026 தேர்தலில், அதிக மெஜாரிட்டியுடன் நாங்கள் வெற்றிபெற்று, 'கரைந்துகொண்டிருப்பது தி.மு.க.தான்' என்பதை உங்களுக்குப் புரியவைப்போம்!"
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.