2019ம் ஆண்டு காலாவதியான நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல்: ஆர்.டி.ஐ மூலம் அதிர்ச்சி தகவல்

1 month ago 4

செங்கல்பட்டு: 2019ம் ஆண்டு காலாவதியான நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் 42%க்கும் மேல் வசூல் செய்ய வேண்டும் என ஆர்.டி.ஐ மூலம் வெளியான தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நீண்ட காலமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தாம்பரம் சிட்லபாக்கத்தை சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் கேட்ட கேள்விக்கு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. அந்த பதிலில், “45 கி.மீ தூரம் உள்ள பரனூர் சுங்க சாலை இரும்புலியூரில் தொடங்கி மேலவளம்பேட்டை நெல்வாய் சந்திப்பில் முடிவடைகிறது. இந்த சுங்கச் சாலை 2004 அக். மாதத்தில் நான்கு வழிச்சாலையாகவும், 2023 மே மாதம் 8 வழிச்சாலையாகவும் மாற்றப்பட்டது. இந்த சாலை அமைக்க மொத்தம் ரூ.1036.91 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் 2005 ஏப்.முதல் 2024 வரை ரூ.596.80 கோடி மட்டுமே சுங்க கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதாவது 19 ஆண்டுகள் 5 மாதங்களில் 57.6% மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மூலதன செலவில் மீட்க வேண்டிய தொகை ரூ.440.11 கோடி உள்ளது. 42.4% சுங்க கட்டணம் இன்னும் நிலுவையில் உள்ளது,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நாள் ஒன்றுக்கு 53,680 வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு பகுதிகளில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. மேலும் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் மின் விளக்குகள் முறையாக எரியாததால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது.

இந்நிலையில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும் சுங்கக் கட்டணம் இன்னும் 42%க்கும் மேல் வசூல் செய்ய வேண்டும் என வெளியான தகவல் என்பது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்ததை சேர்ந்தவர் ஒருவர் கூறுகையில், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியை பொருத்த வரை கடந்த 20 ஆண்டுகள் செயல்பட்டு வந்தாலும் பராமரிப்பு என்பதில் சிறிதளவில் கவனம் செலுத்தவில்லை, சாலைகள் குண்டும் குழியுமாக படுமோசமாக இருப்பதால் தினம் தினம் விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

மின் விளக்குகள் முறையாக எரியவில்லை தமிழத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுகின்றது இலவச கழிப்பறை இல்லை, குடிநீர் இல்லை, விபத்து ஏற்படும் வாகனங்ளை அகற்ற கிரேன் இல்லை என அடுக்கடுக்கான புகார் தெரிவித்திருந்தார். எனவே 2019ம் ஆண்டு காலாவதியான பரனூர் சுங்கசாவடியை அகற்ற வேண்டும் இல்லை என்றால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சுங்கசாவடியை அகற்றும் போராட்டம் மிக விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார்.

The post 2019ம் ஆண்டு காலாவதியான நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல்: ஆர்.டி.ஐ மூலம் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article