![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38897524-6-virat-india-2017-champion.webp)
புதுடெல்லி,
8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக இருந்துள்ளார். அதே சமயத்தில் விராட் கோலி கேப்டனாக இந்திய அணிக்கு ஐ.சி.சி தொடர் எதையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்தது.
ஆனால், அந்த போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்ட இந்திய அணி கோப்பையை நழுவவிட்டது. இந்நிலையில், இந்த தொடர் குறித்து இந்திய அணியின் அப்போதைய பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பாங்கர் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நாங்கள் தவறு செய்து விட்டோம். அப்போது டாஸ் வென்ற நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். நீங்கள் இங்கிலாந்தில் விளையாடும் பொழுது மேகங்கள் இருக்கின்றதா? என்பதை எப்பொழுதும் பார்க்கிறீர்கள். அன்று ஆரம்பத்தில் நல்ல வெயில் அடித்தது.
அணியின் அங்கமாக இருந்த நான் பேட்டிங் செய்ய சொல்லி இருக்க வேண்டும். நான் மட்டுமில்லாமல் விராட் கோலி, மூத்த வீரர் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே எல்லோரும் தவறான முடிவு எடுத்து விட்டோம். அந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து விளையாடும் பொழுது இலக்கு மிகவும் அதிகமாக இருந்தது.
ஹர்திக் பாண்ட்யா மிகவும் தன்னம்பிக்கையுடன் விளையாடி பெரிய சிக்ஸர்கள் அடித்தார். ஜடேஜா அவரை அந்த நேரத்தில் ரன் அவுட் செய்து விட்டார். அதற்காக ஹர்திக் பாண்ட்யா அவர் மீது கோபப்படவில்லை. ஆனால் தான் நின்று விளையாடி இருந்தால் இந்திய அணியை வெல்ல வைக்க முடியும் என்று அவர் நம்பினார். இவ்வாறு அவர் கூறினார்.