2016 உரி, 2019 பாலகோட் பதிலடிக்கு சந்தேகம் எழுப்பிய நிலையில் பஹல்காம் பதிலடிக்கு எதிர்கட்சிகள் முழு ஆதரவளிப்பது ஏன்?: அரசியல் விமர்சனங்களை முன்வைக்காதது குறித்து பரபரப்பு தகவல்கள்

7 hours ago 3

புதுடெல்லி: 2016 உரி, 2019 பாலகோட் பதிலடிக்கு எதிர்கட்சிகள் சந்தேகம் எழுப்பிய நிலையில், பஹல்காம் பதிலடிக்கு ஒன்றிய அரசுக்கு முழு ஆதரவளிப்பது குறித்தும், அரசியல் விமர்சனங்களை முன்வைக்காதது குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த உரி தீவிரவாத தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்களை நடத்தியது. இதேபோல், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களை குண்டுவீசி அழித்தது. இந்த இரு நிகழ்வுகள் நடைபெற்ற போதும் ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான அரசு தான் ஆட்சியில் இருந்தது.

அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிய அரசுக்கு ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பின்னர் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளின் நம்பகத்தன்மை மற்றும் வெற்றி குறித்து கேள்விகளை எழுப்பின. கடந்த 2016ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தபோதும், காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான ஆதாரங்களைக் கோரினார். கடந்த 2019ல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள், ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் தாக்குதலின் தாக்கம் குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தினர். இதுபோன்ற அறிக்கைகள், பெரும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியது. கூடவே பெரும் சர்ச்சைகளையும் கூட்டியது.

இந்நிலையில் கடந்த ஏப். 22ம் தேதி பஹல்காமில் 26 பேரைக் கொன்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒன்றிய அரசின் பதிலடி நடவடிக்கையை ஒருமித்த கருத்தில் ஆதரித்து, எவ்வித ஆதாரங்களையும் கோராமல் ராணுவத்திற்கு ஆதரவு அளித்தனர்.

மேலும் முப்படைகளின் மீதும் முழு நம்பிக்கையை தெரிவித்தனர். மேலும் கடந்த 7ம் தேதி கர்னல் சோஃபியா குரேஷியின் ஊடக விளக்கம், ஆபரேஷன் சிந்தூரின் பதிலடி நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தின. எதிர்கட்சிகளின் இந்த ஆதரவு, கடந்த கால நிகழ்வுகளிலிருந்து குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காட்டுகிறது. எதிர்கட்சிகளின் இந்த மாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஆபரேஷன் சிந்தூரின் தாக்கம், முந்தைய பதிலடி தாக்குதல்களை காட்டிலும் பெரியதாகவும், தெளிவானதாகவும் இருந்தது. இந்த பதிலடி தாக்குதலானது எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் எழுப்பும் வகையில் எந்த அறிகுறியும் தெரியவில்லை.

இரண்டாவதாக, தற்போதைய பதற்றங்கள் அணு ஆயுத மோதல் அபாயத்தை உயர்த்தியுள்ளதால், தேசிய ஒற்றுமை முக்கியமாகக் கருதப்படுகிறது. கடந்த 2016 மற்றும் 2019ல், எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயங்களுக்காக விமர்சனங்களை முன்வைத்ததாக ஒன்றிய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்கு இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பதிலடி கொடுத்தது. இதன் மூலம் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே பரவலான ஆதரவு கிடைத்தது. மேலும், பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) திறம்பட மறுத்ததால், எதிர்க்கட்சிகளின் அரசியல் விமர்சனங்களைக் குறைத்தது.

இந்த ஒருமித்த ஆதரவு, இந்திய அரசியலில் அரிதான தருணமாகக் கருதப்படுகிறது. கடந்த 2016 மற்றும் 2019ல், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் பெரும்பாலும் ஒன்றிய அரசுக்கு ஆதாரமின்மை மற்றும் அரசியல் பகையை தூண்டியது. மேலும் இவை பொதுமக்களிடையே பிளவை ஏற்படுத்தியது. ஆனால், ஆபரேஷன் சிந்தூரின் வெளிப்படையான வெற்றி மற்றும் தற்போதைய பதற்றங்களின் தீவிரத்தன்மை, எதிர்க்கட்சிகளை அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வைத்துள்ளது. இது, எதிர்க்கட்சிகளின் முதிர்ச்சியான அணுகுமுறையையும், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. இருப்பினும், இந்த ஆதரவு நீண்டகாலம் நீடிக்குமா என்பது, இந்தியா – பாகிஸ்தான் மோதலின் எதிர்கால வளர்ச்சிகள் மற்றும் அரசியல் நகர்வுகளை பொறுத்தே இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

The post 2016 உரி, 2019 பாலகோட் பதிலடிக்கு சந்தேகம் எழுப்பிய நிலையில் பஹல்காம் பதிலடிக்கு எதிர்கட்சிகள் முழு ஆதரவளிப்பது ஏன்?: அரசியல் விமர்சனங்களை முன்வைக்காதது குறித்து பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Read Entire Article