2008 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு ஒப்புதல்

1 week ago 3

வாஷிங்டன்: மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், ஒபேராய் ஓட்டல்,நரிமன் இல்லம், சிஎஸ்எம்டி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். நாட்டை யே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் பிடிபட்டான். பின்னர் அவன் தூக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் உசேன் ராணா(63) என்பவரை கடந்த 2009ல் அமெரிக்க போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து இவர் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில், கடந்த 2013ல் ராணாவுக்கு 14 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று, நாடு கடத்த நீதிமன்றம் 2023ல் உத்தரவு பிறப்பித்தது. நாடு கடத்தலுக்கு தடை கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ராணா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தான். இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து ராணாவை நாடு கடத்தி கொண்டு வர என்.ஐ.ஏ., குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். தற்போது, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய டிரம்ப்; சதித்திட்டம் தீட்டியவர்களில் ஒருவரையும், உலகின் மிகவும் தீயவர்களில் ஒருவரையும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவரையும் இந்தியாவில் நீதியை எதிர்கொள்ள நாடு கடத்துவதற்கு எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் நீதியை எதிர்கொள்ள இந்தியா திரும்புகிறார். உலகம் முழுவதும், பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவும், அமெரிக்காவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைந்து செயல்படும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் ஒத்துழைப்போம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர் கூறினார். பயங்கரவாதி தஹாவூர் ராணாவை நாடு கடத்த முடிவு செய்ததற்காக, அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

The post 2008 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article