அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது.
முன்னதாக முதல் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா இடம்பெறாதது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் ஐ.சி.சி. டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருக்கும் இவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்தனர். இருப்பினும் இந்திய அணி வெற்றி கண்டது.
இருப்பினும் தற்போது நடைபெற உள்ள போட்டி பகல் - இரவு ஆட்டம் என்பதால் இந்திய அணி அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து 2-வது போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு:-
"துரதிஷ்டவசமாக இந்த செய்தியை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள நான் முதல் போட்டியில் இல்லை. அவர்களைப் போன்ற அனுபவம் மிகுந்த வீரர்களை அணியில் எடுக்காமல் விடுவது மிகவும் கடினம். ஆனால் அது அணியின் நலனுக்காக அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சிறந்த முடிவாகும். இந்த தொடர் முழுவதும் நாங்கள் அதை தொடர்வதற்கு பார்ப்போம்.
ஆனால் எஞ்சிய தொடர்களில் அவர்கள் நம்முடைய வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவதை நான் பார்ப்பேன். ஏனெனில் அவர்களுடைய அனுபவத்தை குறைவாக மதிப்பிட முடியாது. அவர்கள் தரமான வீரர்கள்" என்று கூறினார்.