2-வது டெஸ்ட்: ராகுல் - சர்பராஸ் இருவரில் யார் அணியில் இடம் பிடிப்பார்..? - டென் டோஸ்கேட் பதில்

3 months ago 14

பெங்களூரு,

பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பண்ட் 99, சர்பராஸ் கான் 150 ரன்கள் அடித்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினர்.

குறிப்பாக சுப்மன் கில் காயமடைந்ததால் வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் முதல் இன்னிங்சில் டக் அவுட்டானார். ஆனால் அதே தவறை 2-வது இன்னிங்சில் செய்யாத அவர் தனது முதல் சதத்தை அடித்து 150 ரன்கள் குவித்து அசத்தினார். மறுபுறம் ராகுல் இந்த போட்டியிலும் 0, 12 ரன்கள் மட்டுமே அடித்து தோல்விக்கு முக்கிய காரணமானார்.

இந்த சூழ்நிலையில் சுப்மன் கில் காயத்திலிருந்து குணமடைந்து 2வது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சர்பராஸ் - ராகுல் ஆகியோரில் ஒருவர் பெஞ்சில் அமர வைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது போன்ற சூழ்நிலையில் தேவைப்பட்டால் ராகுல் நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "சர்பராஸ் கடந்த போட்டியில் அபாரமாக விளையாடினர். கே.எல். ராகுலிடம் சென்ற நான் நீங்கள் எத்தனை பந்துகளை அடித்தீர்கள் எத்தனை பந்துகளை விட்டீர்கள் என்று கேட்டேன். அவர் ஒரு பந்தை கூட அடிக்கவும் இல்லை விடவும் இல்லை. நீங்கள் ரன்கள் அடிக்காதபோது இதுதான் நடக்கும். லெக் சைட் திசையில் அவர் கொஞ்சம் அடித்தது நல்லது. எனவே ராகுல் பற்றி எந்த கவலையும் இல்லை.

இருப்பினும் சூழ்நிலையை பார்த்து அதற்கு தகுந்தாற்போல் நாங்கள் அணியை தேர்ந்தெடுப்போம். 150 ரன்கள் குவித்த சர்பராஸ் இராணி கோப்பையில் இரட்டை சதத்தை அடித்தார். எனவே அவருடைய பார்மை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அணியின் நலனுக்கு தேவையான முடிவை எடுப்போம். தொடர்ந்து அனைத்து வீரர்களுக்கும் ஆதரவும் கொடுப்போம்" என்று கூறினார்.

Read Entire Article