2-வது டெஸ்ட்: பும்ரா கண்டிப்பாக விளையாட வேண்டும் - காரணத்துடன் விளக்கிய இந்திய முன்னாள் வீரர்

1 week ago 3

சென்னை,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது. பீல்டிங் சொதப்பல் மற்றும் இரு இன்னிங்சிலும் கடைசி கட்டத்தில் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த இந்திய அணிக்கு 2-வது டெஸ்ட் இன்னும் அதிக சோதனையாக இருக்கப்போகிறது.

2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் நாளை (புதன்கிழமை) இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இதனிடையே இந்திய அணியின் 'நம்பர் ஒன்' வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் 3 டெஸ்டில் மட்டுமே ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் அவரது பணிச்சுமையை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் 2-வது டெஸ்டில் அவர் ஆடுவாரா இல்லையா என்பது அடுத்த 24 மணி நேரத்தில் தீர்மானிக்கப்படும் என்று இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரையான் டென் டஸ்சாட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா இத்தொடரை வெல்ல வேண்டுமெனில் 2-வது போட்டியில் பும்ரா விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த போட்டியை பற்றி நாம் பேசினால், நீங்கள் பும்ராவை விளையாட வைப்பீர்களா? என்று கேட்டால் ஆம் என்பதுதான் என்னுடைய பதிலாக இருக்கும். பும்ரா விளையாட விரும்பினால் கண்டிப்பாக விளையாட வேண்டும். ஏனெனில் 0-1 என்ற கணக்கில் நாம் பின்தங்கியிருக்கும் இந்த சூழ்நிலையில் அவர் விளையாடுவது பெரிய விஷயம். பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறார் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது நமக்கு தெரியும். முதல் போட்டி முடிந்த பின் நமக்கு 10 நாட்கள் இடைவெளி கிடைத்தது.

எனவே 2-வது போட்டியில் விளையாட அவர் தயாராக இருப்பார் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை 2வது போட்டியில் இந்தியா வென்று 1 - 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தால் பும்ராவை 3 அல்லது 4-வது போட்டியில் ஓய்வெடுக்க வைக்கலாம். ஒருவேளை 2-வது போட்டியில் தோற்றால் அவரை 4வது போட்டியில் மட்டும் விளையாட வையுங்கள். சிறந்த பந்துவீச்சாளரான அவர் வெற்றிக்காகவே விளையாடுவார்.

அதனால் வெற்றி பறிபோன பின் விளையாடி என்ன பயன்? அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து மீண்டும் வந்த சமயங்களில் எல்லாம் அவர் அபாரமாக விளையாடியுள்ளார். எனவே பும்ரா 2-வது போட்டியில் விளையாட வேண்டும். வெளிநாட்டில் நடைபெறும் இந்த தொடரில் 2 - 0 என்ற கணக்கில் நாம் ஆரம்பத்திலேயே பின்தங்கி விட்டால் மீண்டும் வந்து தொடரை வெல்வது கடினமாகி விடும்" என்று கூறினார்.

Read Entire Article