2-வது டி20 போட்டி: பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

3 hours ago 2

டுனெடின்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி டுனெடினில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 46 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி, பென் சீயர்ஸ், நீஷம் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் சீபர்ட் - பின் ஆலன் களமிறங்கினர். இந்த இன்னிங்சின் முதல் ஓவரை ஷாகீன் அப்ரிடி ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் மெய்டனாக வீசினார். ஆனால் 2-வது ஓவரில் பின் ஆலன் 3 சிக்சர்கள் அடித்து ஆட்டத்தை அதிரடியாக வீசினார்.

பின்னர் 3-வது ஓவரை வீசிய ஷாகீன் அப்ரிடியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய டிம் சீபர்ட் அந்த ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள் உள்பட 26 ரன்கள் அடித்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் டிம் சீபர்ட் (45 ரன்கள்) ஆட்டமிழந்தார். பின் ஆலன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவர்களின் வலுவான தொடக்கத்தால் எந்த வித சிக்கலுமின்றி இலக்கை நோக்கி முன்னேறிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. பின்வரிசையில் மிச்செல் ஹே 21 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


Read Entire Article