2 நாள் மழையால் பொதுமக்கள் முடக்கம்; புயல், கனமழை முன்னெச்சரிக்கை 10,000 மணல் மூட்டைகள் தயார்: பாதிப்புகள் சீரமைக்க குழுக்கள் அமைப்பு

3 months ago 10

தஞ்சாவூர், நவ. 28: பெங்கல் புயல் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக 10,000 மணல் மூட்டைகள் தயாராக உள்ளன. தேவைக்கேற்ப மரக்கட்டைகள், மழைநீர் வெளியேற்றும் மோட்டார்களும் ரெடியாக உள்ளன. தஞ்சாவூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பாக பெங்கல் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப்பணிகள் தயார் நிலையில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பெங்கல் புயலால் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் மழை தொடர்ந்து பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை சீரமைக்க அரசு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் படி கோட்டப்பொறியாளர் செந்தில்குமார் ஆலோசனையின் பேரில் உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் லட்சுமி பிரியா ஆகியோர் பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இதன்படி தஞ்சாவூர் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மணல் மூட்டைகள், தேவைக்கேற்ப மரக்கட்டைகள், மண்வெட்டிகள், அரிவாள், உயிர்காக்கும் உடைகள், கருவிகள், தண்ணீர் தேங்கினால் அதை வெளியேற்றும் மின்சாதன மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், கடப்பாறைகள், கயறுகள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களும் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் சேதம் பற்றி உடன் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவத்தால் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்துவிடுவர் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதேபோல தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் படி, 24மணி நேரமும் 4 துப்புரவு ஆய்வாளர்கள், 6 தூய்மை பணி மேற்ப்பார்வையாளர்கள் 40 தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் ஆகியோர் பணி செய்ய ஏதுவாக இரண்டு ஜெனரேட்டர்கள், 6 மின் மோட்டார்கள், 8 மர அரவை இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

The post 2 நாள் மழையால் பொதுமக்கள் முடக்கம்; புயல், கனமழை முன்னெச்சரிக்கை 10,000 மணல் மூட்டைகள் தயார்: பாதிப்புகள் சீரமைக்க குழுக்கள் அமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article