திருச்சி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வருகிறார். நாளை காலை சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு 11 மணிக்கு திருச்சி வரும் அவருக்கு, விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து 11.30 மணியளவில் துவாக்குடி ஜி.பி.டி வளாகத்தில் ரூ.69 கோடியில் ஹைடெக் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், விடுதி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளியை முதல்வர் திறந்து வைக்கிறார். விழா முடிந்ததும் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் முதல்வர் அங்கு அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு தலைமை தபால் அலுவலகம், அரசு மருத்துவமனை, நான்கு ரோடு, தில்லைநகர் வழியாக கலைஞர் அறிவாலயம் செல்கிறார். அங்கு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார். அதன் பின்னர், அரசு விருந்தினர் மாளிகை சென்று ஓய்வு எடுக்கிறார். நாளை மறுநாள்(9ம் தேதி) காலை 9 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னார்புரம் நால்ரோடு சந்திப்பு, கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர் வழியாக பஞ்சப்பூர் செல்கிறார். அங்கு பெரியார் உருவச்சிலையை திறந்து வைத்து ரூ.236 கோடி மதிப்பீட்டில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத்தொடர்ந்து, அதற்கு எதிர்புறம் ரூ.129 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, அண்ணா உருவச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை அடைந்து அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
பின்னர், ரூ.406 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை திறந்து வைத்து, பஸ் முனைய வளாகத்தை பார்வையிடுகிறார். அதனைத்தொடர்ந்து, பஸ் முனையத்தின் முதல் தளத்தில் நகர பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பஸ் முனையத்திற்கு அருகில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்குகிறார். அதன்பின் அவர் ரூ.463 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, ரூ.277 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக ளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.830 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
அதன் பின்னர், அரசு விருந்தினர் மாளிகையை சென்றடையும் அவர் மாலை 5மணி யளவில் அங்கிருந்து புறப் பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் எம்ஐஇடி இன்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் அன்று இரவு விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்வர் திருச்சிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் வருவதை முன்னிட்டு அவரை வரவேற்க திமுகவினர் மாநகர் முழுவதும் கட்சிகொடிகளையும், வரவேற்பு தோரணங்களையும் சுட்டி வருகின்றனர். மேலும் பஞ்சப்பூரில் விழா மேடை அமைக்கும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி நாளை, நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை: பஞ்சப்பூர் பஸ் நிலையம், துவாக்குடி மாதிரி பள்ளியை திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.