2 ஏக்கரில் 2000 வாழை!

1 week ago 2

ஆர்கானிக் விவசாயம்… நேரடி விற்பனை…

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள குன்னுவாரன்கோட்டையைச் சேர்ந்த ஜெயகணேஷ் பள்ளிப்படிப்பை முழுதாக முடிக்கவில்லை. இடையில் பிழைப்புக்காக ஆந்திர மாநிலத்தில் வாசம். ஒருகட்டத்தில் சொந்த ஊர் திரும்பியபோது காலம் அவரை இயற்கை விவசாயத்தின் பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது. பாரம்பரிய நெல், வாழை என இவர் விளைவிக்கும் பொருட்களுக்கு அந்தப் பகுதியில் ஒரு மவுசு கிடைத்திருக்கிறது. தனது இயற்கை விவசாயத்தின் மூலம் ஒரு முன்மாதிரி விவசாயியாக உயர்ந்திருக்கும் ஜெயகணேஷைச் சந்தித்துப் பேசினோம்.

“நான் ஒன்றாம் வகுப்பு படிக்கத் தொடங்கியதில் இருந்தே தாத்தா, அப்பாவோடு வயலுக்குச் செல்வேன்.

இதனால் சிறுவயதில் இருந்தே விவசாயப் பணிகளோடுதான் வளர்ந்தேன். ஏழாவது வரைதான் படிக்க முடிந்தது. படிப்பு முடிந்த பிறகு ஆந்திராவுக்கு முறுக்கு வியாபாரம் செய்ய நானும் அண்ணனும் சென்றுவிட்டோம். அடுத்த பதினைந்து வருடங்கள் அங்குதான் கழிந்தது. அதன்பின் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற கட்டாயம். ஊருக்கு வந்த பின்பு அம்மா, அப்பாவோடு விவசாயப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தேன். ஒரு கட்டத்தில் முழுமையாக விவசாயத்தில் இறங்கி விட்டேன்.

எங்கள் ஊரில் மொத்தம் 1000 வீடுகள் இருக்கும். அதில் 800 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விவசாயம்தான் வாழ்வாதாரம். அவர்களில் பெரும்பாலானோர் ரசாயன உரத்தைத்தான் பயிர்களுக்கு பயன்படுத்துகிறார்கள். நான் விவசாயம் செய்ய ஆரம்பித்தபோது ரசாயன உரங்களைப் பற்றி பெரிதாக தெரியாது. பக்கத்து வயல் விவசாயிகள் ஒரு ரசாயன உரத்தைக் கொடுத்து மகசூல் அதிகம் வருமெனக் கூறி வயலுக்கு போடச் சொன்னார்கள். நான் அந்த உரத்தைப் போட்ட பிறகு மண்ணில் இருந்த மண்புழுக்கள் அனைத்தும் வயலில் செத்துக்கிடந்தன. அவ்வளவு வீரியம் மிகுந்த ரசாயனத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் எப்படி சாப்பிட உகந்ததாக இருக்கும்? என யோசித்தேன். அப்போதே அந்த ரசாயன உரத்தை நிறுத்திவிட்டு இயற்கை முறை விவசாயம் பக்கம் திரும்பினேன்.

என்னிடம் உள்ள ஐந்தரை ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கரில் தூயமல்லி அரிசியும், மற்றொரு 2 ஏக்கரில் ரஸ்தாலி உட்பட 10 வகையான வாழையும், மீதமுள்ள இடத்தில் எள்ளு, மா இஞ்சி உள்ளிட்ட பயிர்களும் வைத்திருக்கிறேன். தூயமல்லி அரிசியை இப்போதுதான் அறுவடை செய்து முடித்தேன். மா இஞ்சியை விரைவில் அறுவடை செய்ய இருக்கிறேன். வாழை மட்டும் வாரந்தோறும் கை கொடுக்கிறது’’ என்றவர் வாழைத் தோட்டத்தை சுற்றிக் காண்பித்தபடி வாழைபற்றி பேசத் தொடங்கினார்.

இந்த இரண்டு ஏக்கரில் ரஸ்தாலி, கற்பூரவல்லி, ஏலக்கி, நாட்டுப்பழம் என பத்து வகையான வாழை மரங்களை வைத்திருக்கிறேன். இந்த வாழைகள் அனைத்துமே 7 வருடங்களுக்கு முன்பு நட்டது. தற்போது வரை பலன் தருகிறது. அதாவது, வாழையைப் பொருத்தவரை வருடத்திற்கு ஒரு குலைதான் வரும். அவ்வாறு மகசூல் கொடுத்த வாழைக்கு அருகே புதிதாக வரும் பக்கக் கன்றுகளில் இருந்து அடுத்தடுத்த வருடங்களில் தார்கள் கிடைக்கிறது. அந்த வகையில் நான் தொடந்து ஏழு வருடங்களாக வாழை அறுவடை செய்கிறேன்.

இப்படி வருடம் முழுவதும் 2000 மரங்களில் இருந்து வெவ்வேறு பருவத்தில் காய்கள் வந்தபடி இருக்கும். சராசரியாக குறைந்தபட்சம் வாரம் 30 வாழைத்தார்களாவது அறுவடை செய்துவிடுவேன். அறுவடை செய்கிற தார்களை மார்க்கெட்டிற்கோ வியாபாரிகளுக்கோ கொடுக்காமல் நானே நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் என்னைப் போன்ற 17 விவசாயிகள் சேர்ந்து தனியாக இயற்கை விவசாயக்குழு அமைத்து அதன்மூலம் ஆன்லைன் மற்றும் வாட்சப் போன்ற தளங்களில் எங்கள் விளைபொருட்களை நாங்களே விற்பனை செய்துவருகிறோம்.

வாழைமரங்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுவோம். பாசன நீரோடு மீன் அமிலத்தைக் கலந்து இடுவேன். வேறு எந்த உரமும் வைப்பதில்லை. களையோ கூட நான் எடுப்பது கிடையாது. இதனால் செலவு பெரியளவில் மிச்சமாகிறது’’ என்கிறார்.

தொடர்புக்கு:
ஜெய்கணேஷ்: 97866 82436.

The post 2 ஏக்கரில் 2000 வாழை! appeared first on Dinakaran.

Read Entire Article