திருமலை: 20 வயது இளம்பெண்ணுக்கு 42 வயது ஆணுடன் கட்டாய திருமணம் ெசய்ய இருந்ததை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் அன்னாவரத்தில் உள்ள சத்தியநாராயணசாமி கோயிலில் நேற்று காலை ஒரு ஜோடிக்கு திருமண ஏற்பாடு நடந்தது. இதற்காக கோயில் வளாகத்தில் சிறிய அளவில் மணமேடை அமைக்கப்பட்டது. இருவீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வந்தனர்.
மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் மணமேடையில் அந்த பெண், கதறி அழுதார். சிறிது நேரத்தில் மணமகன் அழைத்துவரப்பட்டார். தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடமே இருந்த நிலையில் மணமகள் மேலும் கதறி அழுதார். அப்போது கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் பார்த்து போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் உடனடியாக கோயிலுக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மணமகளிடம் கதறி அழுதது ஏன் என விசாரித்தனர். அப்போது அந்த மணப்பெண் எனக்கு 20 வயதாகிறது. ஆனால் என்னை விட 22 வயது அதிகமுள்ளவருடன் தனது பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த திருமணம் வேண்டாம் எனக்கூறினேன். ஆனால் கட்டாயப்படுத்தி மணமேடைக்கு அழைத்து வந்துவிட்டனர் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் இருவீட்டாரையும் அழைத்து விசாரித்தனர். பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் திருமணத்தை நடத்தக்கூடாது என்று எச்சரித்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. இருவீட்டாரும் போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post அதிக வயதுடையவருடன் கட்டாய திருமணம்; மணமேடையில் கதறி அழுத இளம்பெண்: ஆந்திராவில் பரபரப்பு appeared first on Dinakaran.