மாமல்லபுரம்: சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பிலும் சென்னைக்கு ஏராளமான பஸ்கள் தினமும் தங்கு தடையின்றி இயக்கப்படுகின்றன. மேலும், அரசு தொடர் விடுமுறை நாட்களில் ஏராளமான பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இதனால், இசிஆர் சாலை எப்போதுமே வாகன போக்குவரத்து நிறைந்து பரபரப்பாகவே காணப்படுகிறது.
சென்னை-புதுச்சேரி மார்க்கத்தில் தக்ஷிண சித்ரா, முட்டுக்காடு படகு குழாம், கோவளம் நீலக்கொடி கடற்கரை, வட நெம்மேலி பாம்பு மற்றும் முதலை பண்ணை, மாமல்லபுரம், முதலியார் குப்பம் படகு குழாம், ஆலம்பரை கோட்டை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இந்த சாலையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய நெடுஞ்சாலையாக மாற்றி, மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை 90 கிமீ தூரம் வரை பாரத் மாலா பாரி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1270 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்க 2018ல் முடிவெடுத்தது. சென்னை-புதுச்சேரி இசிஆர் சாலை கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவழி சாலையாக இருந்தது.
இதையடுத்து, 1998ம் ஆண்டு இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டு தற்போது வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வருகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்த சென்னை அக்கரை பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை 30 கிமீ நீளத்துக்கு 2018ம் ஆண்டு 4 வழிச் சாலையாக மாற்றப்பட்டது. முதலில், இந்த சாலையை பராமரித்து பாதுகாப்பதற்காக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
2022ம் ஆண்டு வரை இசிஆர் சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வந்த நிலையில், தற்போது ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மேலும், இச்சாலையை மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை விரிவுபடுத்தி, விபத்துகளை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு முடிவெடுத்து, இதற்காக பாரத்மாலா பாரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1270 கோடியை ஒதுக்கி கடந்த 2018ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
இதில், முதல் கட்டமாக மாமல்லபுரம்-முகையூர் இடையே 30 கிமீ தூரம், 2வது கட்டமாக முகையூர்-மரக்காணம் வரை 30 கிமீ தூரம், 3வது கட்டமாக மரக்காணம் புதுச்சேரி வரை 30 கிமீ தூரம் என மொத்தம் 90 கிமீ தூரம் வரை 4 வழிச் சாலையாக விரிவுபடுத்த முடிவு செய்து தற்போது மாமல்லபுரம்-முகையூர் இடையே பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி, மணமை, வெங்கப்பாக்கம், பூந்தண்டலம், இளையனார்குப்பம், வாயலூர், வேப்பஞ்சேரி, காத்தான்கடை, கூவத்தூர், வடபட்டினம் உள்ளிட்ட இடங்களில் வீட்டு மனைகள், விவசாய நிலங்கள் கையகபடுத்தப்பட்டு அங்குள்ள மேடு பள்ளங்களை சமன் செய்து லாரிகள் மூலம் ஏரி மண் கொண்டு வந்து கொட்டி போர்க்கால அடிப்படையில் 4 வழிச்சாலை விரிவுபடுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில, இடங்களில் சாலை பணியும் முடிந்துள்ளது.
இந்நிலையில், 4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இச்சாலை, பணிக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமலும், சாலை நடைபெறும் இடத்தில் இங்கு சாலைப் பணி நடைபெறுகிறது என எங்கேயும் தற்காலிக பெயர் பலகை வைக்காமல் சாலைப்பணி நடைபெறுவதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து இசிஆர் சாலை வழியாக புதுச்சேரியை கடந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள், அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி இசிஆர் சாலை வழியாக சென்னைக்கு வருபவர்கள் எங்கு வேலை நடைபெறுகிறது என தெரியாமல் வேகமாக வந்து மேடு பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
4 வழிச்சாலை பணி தொடங்கி, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு, மாமல்லபுரம் அடுத்த மணமை இசிஆர் சாலையில் சென்னை நோக்கி ஆட்டோவில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடம்பாடி, இசிஆர் சாலையில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தலையிட்டு விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், 4 வழிச்சாலை பணி நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* தற்காலிக பெயர் பலகை இல்லை
மாமல்லபுரம்-புதுச்சேரி வரை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி ஆங்காங்கே நடந்து வருகிறது. இச்சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் வேலை நடைபெறுகிறது என எந்த இடத்திலும் தற்காலிக பெயர் பலகை இல்லை.
* பட்டாதாரர்களுக்கு பணம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு
4 வழிச்சாலை பணிக்காக முதற்கட்டமாக மாமல்லபுரம்-முகையூர் வரை இடையூறாக உள்ள கட்டிடங்கள் அகற்றப்பட்டு, பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதில், பெரும்பாலான பட்டா நிலம் உரிமையாளர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
* 20க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய 4 வழிச்சாலை பணி
கடந்த 2 ஆண்டுகளாக இசிஆர் சாலையை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும், முறையான பெயர் பலகை வைக்காததாலும் விபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
* தரமான சாலை அமைக்க வேண்டும்
சாலையை தரமாகவும் பல ஆண்டுகள் தாங்கும் வகையில் உறுதி தன்மையுடன் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post 2 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்டோர் பலி மாமல்லபுரம்-புதுச்சேரி சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.