சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி கூட்டத்தில் பவர் பாயிண்ட் மூலம் துணை முதல்வர் உதயநிதி விளக்கம் அளித்தார். தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகளை நான்கு அம்சங்களாக பிரித்து துணை முதல்வர் உதயநிதி விளக்கம் கொடுத்தார். அதில், “பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு. தென் இந்தியாவில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 30% லிருந்து 20% ஆக குறையும். தற்போதைய நிலையில் தொகுதி மறுவரையறை செய்தால் 7 மாநிலங்களுக்கும் சேர்த்து 44 தொகுதிகள் குறையும். இதனால் கூட்டாட்சி தத்துவத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பல ஆண்டுகளாக மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தி வருகின்றன. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு பாராட்டப்பட வேண்டிய மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு மூலம் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்படும் என்று ஒன்றிய அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மாநிலத்தின் உரிமைகள், குரலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளார். தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைத்த காலக்கெடு அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது. 1971 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படியே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் எத்தனை தொகுதிகள் அதிரிக்கும், குறையும் என்பதை தெரிவிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படியே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் : துணை முதல்வர் உதயநிதி கோரிக்கை!! appeared first on Dinakaran.