1965க்கு பிறகு தி.மலையில் அதிக மழைப்பொழிவு: எ.வ.வேலு பேட்டி

2 days ago 2

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது. பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது. சற்றும் எதிர்பாராமல் வேகமாக உருண்டு வந்த பாறை, வ உ சி. நகர் தெருவில் வீடுகளின் மீது விழுந்தது. இதில் இரு வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் என்.டி.ஆர்.எஃப். உடன் இணைந்து மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் மீது விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே  வ.உ.சி. நகரில் மேலும் ஓரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அமைச்சர் ஏ.வ.வேலு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

3 தினங்களாக திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்துள்ளது. அரசின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாழ்வான பகுதியை சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 2 வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உடன் மண்ணுக்குள் வீடு புதைந்துள்ளது.மண், கல்லின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இன்று பிற்பகல் ஐஐடி வல்லுநர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். மண்ணில் புதைந்த வீட்டிற்குள் இருப்பவர்களை காப்பாற்றும் பணி தொடரும். இடர்பாடுகளால் மீட்பு பணியை மேற்கொள்வதில் சில சிக்கல் நிலவுகிறது. 1965க்கு பிறகு தி.மலையில் அதிக மழைப்பொழிவு பெய்துள்ளது என்றார்.

Read Entire Article