சென்னை: 2003 சைபர் கிரைம் காவல் நிலைய வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் A.ராதிகா, ஆலோசனையின் பேரில் விசாரணை நிலுவை வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு, குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி பெற்று தந்திடவும், வழக்கின் எதிரிகளுக்கு உரிய நீதிமன்ற தண்டனை பெற்று தந்திட உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவு எதிரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 2003 ஆம் வருடம், சென்னை, கோடம்பாக்கம் ஹைரோட்டில் செயல்படும் எக்ஸ்செல் நெட்வொர்க் நிறுவனமும், பாரிமுனையில் செயல்படும் அக்ஸெஸ் என்ற நிறுவனமும் 34 டெலிபோன் இணைப்புக்கள் பெற்று, டெலிபோன் பில் கட்டாததால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்க்கு ரூ.49,00,000/- இழப்பு ஏற்பட்டது. இது குறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 26.03.2003ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 2 எதிரிகள் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதனை தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்தது.
விசாரணையின் போது குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்கள். எனவே கடந்த 2006 ஆம் ஆண்டு நீதிமன்றம் எதிரிகள் இருவரையும் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது. சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின்படி, 19 வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து, எதிரிகளின் பூர்வீகமான ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் விசாரணை துவங்கி அதனை தொடர்ந்து எதிரிகளின் இருப்பிடம் அறிந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டத்தின் அருகே தலைமறைவாக வசித்து வந்த குற்றவாளிகள் சையது இப்ராஹிம், முஹம்மது தாஹா யாசீன் ஹமீம், ஆகிய 2 பேரை கண்டறிந்து, கைது செய்து, சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் கைது: சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.