
லக்னோ,
18-வது ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பண்ட் 118 ரன்களும், மிட்செல் மார்ஷ் 67 ரன்களும் அடித்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாகா ஜிதேஷ் சர்மா 85 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர். லக்னோ தரப்பில் வில்லியம் ஒரூர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கம்பீரமாக பிளே ஆப் சுற்றில் விளையாட உள்ளது.
இந்த ஆட்டத்தில் 6-வது வரிசையில் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா 85 ரன்கள் அடித்து பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் சேசிங்கின்போது 6 அல்லது அதற்கும் கீழ் உள்ள பேட்டிங் வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர்களின் சாதனை பட்டியலில் மகேந்திரசிங் தோனி, பொல்லார்டு மற்றும் ரசலை (70 ரன்கள்) முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ஜிதேஷ் சர்மா - 85 ரன்கள்
2. மகேந்திரசிங் தோனி/ரசல்/பொல்லார்டு - 70 ரன்கள்
3. பிராவோ - 68 ரன்கள்