சென்னை: தமிழகத்தில் உள்ள 179 நீதிமன்ற வளாகங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதால் வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் ஹரி ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 179 நீதிமன்றங்களில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த 7,800 கண்காணிப்பு கேமிரா மற்றும் மானிட்டர்கள் பொருத்தப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசிடம் 20 கோடியே 4 லட்சம் ரூபாய் நிதி கேட்டு கடந்த மாதம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்ப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தி விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post 179 நீதிமன்ற வளாகங்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்த ரூ20 கோடி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்: ஐகோர்ட்டில் உயர்நீதிமன்ற பதிவுத்துறை தகவல் appeared first on Dinakaran.