புதுடெல்லி:
கலை மற்றும் கலாசாரம், துணிச்சல், கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு, சுற்றுச்சூழல் ஆகிய 7 பிரிவுகளில் சிறப்பான சாதனைகளை புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 17 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருதுகளை வழங்கி வாழ்த்தினார். 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 சிறுவர்கள் மற்றும் 10 சிறுமிகளுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி, குழந்தைகளின் திறமைகளை அங்கிகரிப்பதும் வாய்ப்புகளை வழங்குவதும் நமது பாரம்பரியத்தின் ஒரு அங்கம் என்றும், இந்த பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.