சென்னை,
கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 'பில்லா' திரைப்படத்தில் நமீதா, நயன்தாரா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஜித்குமார் இரட்டை வேடத்தின் நடித்த இப்படம் 1980ல் ரஜினி நடித்த 'பில்லா' படத்தின் ரீமேக் ஆகும். அதுவரை அஜித் பக்கபக்கமாக வசனங்கள் பேசி நடித்து வந்த நிலையில் பில்லா படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படத்திற்கு பிறகு தான் அஜித்தின் ஸ்டைலும், நடிப்பும் அடுத்தகட்டத்துக்கு சென்றது. அஜித்தின் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக இப்படம் அமைந்தது.
2012ம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால், முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பு பெறாமல் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இந்நிலையில், பில்லா படம் வெளியாகி இன்றோடு 17 வருடங்களை எட்டியுள்ள நிலையில் படத்தின் வசூல் விவரம் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் உலா வருகிறது. அந்த வகையில், படம் மொத்தமாக ரூ. 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.
'பில்லா' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'ஆரம்பம்' மூலம் மீண்டும் அஜித்துடன் கைகோர்த்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அஜித் - விஷ்ணு வர்தன் - யுவன் காம்போ மீண்டும் எப்போது இணையும் என கேள்விக்கு இயக்குனர் விஷ்ணு வர்தன் "பேசிட்டு இருக்கோம்" என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.