பெரும்புதூர்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றதாகும். பகீரதன், இந்திரன், துர்வாசமுனிவர், அருணகிரிநாத சுவாமிகள் ஆகியோர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுள்ளனர்.இங்கு, வந்து முருகனை வழிபட்டால் திருமண பாக்கியம், சொந்தவீடு, இழந்த பதவிகள் கிடைப்பதாக ஐதீகம். அதனால் செவ்வாய், வெள்ளி, அரசு விடுமுறை நாட்களில் பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்கு கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பிறகு, சுமார் 17 ஆண்டுகளுக்கு பின், இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.1.50 கோடி மதிப்பில் மூலவர் சன்னிதி பழுதுபார்த்து புதுப்பித்தல், விநாயகர், சண்முகர், திரிபுரசுந்தரி அம்மன், உற்சவர் சன்னிதிகள் புதுப்பித்தல், இடும்பன் கடம்பன் பைரவர் சன்னிதிகள் புனரமைத்தல், கருங்கல் தரைதளம் புனரமைத்தல், வடக்கு ராஜகோபுரம் கட்டுதல், அனைத்து கோபுரங்கள் விமானங்கள் வண்ணம் தீட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் பின்புறம் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலைகளில் சிறப்பு வாய்ந்த 49 யாக குண்டத்துடன் கூடிய உத்தம பட்சம் எனும் வகையில் யாகசாலை அமைக்கபட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. சனிக்கிழமை இரண்டாம் காலம் மூன்றாம் கால யாக பூஜைகளும், நேற்று நான்காம் காலம் ஐந்தாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று காலை ஆறாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. மொத்தம் 60 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகத்தை 108 சிவாச்சாரியார்களும், 9 ஓதுவார்களும் சேர்ந்து வேத மத்திரங்கள் முழங்க காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு “முருகனுக்கு அரோகரா…’’ என்ற கோஷங்கள் எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவுப்படி காஞ்சிபுரம் இணை ஆணையர் குமரதுரை மேற்பார்வையில் கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்தேவராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.விழாவில், ராமானுஜர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மேவளூர்குப்பம் கோபால், பெரும்புதூர் நகராட்சி தலைவர் சாந்தி சதிஷ்குமார், நகர செயலாளர் சதிஷ்குமார், வல்லக்கோட்டை ஊராட்சி தலைவர் மணிமேகலை தசரதன், துணை தலைவர் சிவா எத்திராஜ், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post 17 ஆண்டுகளுக்கு பிறகு வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் appeared first on Dinakaran.