17 ஆண்டுகளுக்கு பின் லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல்: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல்

1 week ago 5

டெல்லி: பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 17 ஆண்டுகளுக்கு பின் லாபம் ஈட்டியதாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நட்டத்தில் இயங்கி வந்த நிலையில், அண்மையில் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், சில செல்போன் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு காரணமாக பிஎஸ்என்எல்-க்கு வாடிக்கையாளர்கள் கணிசமாக மாறினர்.

இதனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் தற்போது மொபைல் இணைப்பு, வீடுகளுக்கு பைபர் சேவை ஆகியவற்றில் 18% வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் 9 கோடியாக அதிகரித்துள்ள நிலையில், 2007ம் ஆண்டுக்கு பிறகு நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மேலும், நிதி செலவு உள்ளிட்ட மொத்த செலவினங்களை கழித்தாலும் ரூ.1800 கோடி மிச்சமாகி உள்ளது. தற்போது 4G சேவையை அமல்படுத்தில் பிஎஸ்என்எல் தீவிரமாக உள்ளது. இதற்காக ஒரு லட்சம் டவர்கள் அமைக்கப்பட உள்ள நிலையில், 75,000 டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. எஞ்சியவற்றை வரும் ஜூன் மாதத்திற்குள் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது; கடைசியாக 2007ம் ஆண்டு BSNL காலாண்டு லாபத்தை ஈட்டியிருந்தது. 2024-25ன் அக்.-டிச. காலாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.262 கோடி லாபம் ஈட்டி உள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 8.4 கோடியாக இருந்த சந்தாதாரர் எண்ணிக்கையும் டிசம்பரில் சுமார் 9 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறையின் பயணத்தில் ஒரு முக்கியமான நாள் என்று தெரிவித்தார்.

The post 17 ஆண்டுகளுக்கு பின் லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல்: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article