150 வயது வரை வாழ்வது எப்படி...? இந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் - அமெரிக்க தம்பதி வெளியிட்ட தகவல்

3 months ago 20

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் மிட்வெஸ்ட் பகுதியை சேர்ந்தவர் வாரன் லென்ஸ் (வயது 36). இவருடைய மனைவி கைலா பார்னஸ்-லென்ஸ் (வயது 33). இந்த தம்பதி, மனிதனின் வாழ்நாளுக்கான எல்லையை கடந்து வாழ்வது என உறுதி எடுத்துள்ளது. ஒரு நூற்றாண்டை கடந்தும் ஆரோக்கியத்துடன் வாழ்வது என்ற இலக்கை அவர்கள் கொண்டுள்ளனர்.

கைலா, கிளெவ்லேண்ட் பகுதியை அடிப்படையாக கொண்ட சுகாதார மற்றும் நீண்டநாள் வாழ்வதற்கான கிளினிக்கின் நிறுவனர்களில் ஒருவராக இருக்கிறார். அவருடைய கணவர் வாரன், சந்தைப்படுத்துதல் நிறுவனம் ஒன்றில் தலைமை வருவாய் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த தம்பதி தங்களுடைய வாழ்நாளை 150 வயது வரை உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியத்துடன் வைத்திருந்து வாழ்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் சராசரி வாழ்நாள் 76 ஆக உள்ளது. அதனை கடந்தும் வாழ்வோம் என்ற நம்பிக்கையுடன் தினசரி நடவடிக்கைகளில் சில விசயங்களை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.

 

 

இதுபற்றி கைலா கூறும்போது, எங்களுடைய மனம் மற்றும் உடலை நேர்மறையாக வைத்திருப்பதன் மூலம் அன்றைய நாளை நாங்கள் திறம்பட கொண்டு செல்ல விரும்புகிறோம். காலை பொழுது, மின்காந்த புல தெரபியுடன் (சிகிச்சை) தொடங்குகிறது என்கிறார். இதற்காக வீட்டிலேயே கிளினிக் சார்ந்த உபகரணம் ஒன்றை வைத்து பயன்படுத்துகிறார்கள்.

இதன்பின்பு, உடற்பயிற்சி மற்றும் காலை வேளையில் சூரியனிடம் இருந்து வெப்பம் பெறுவதற்காக நடைப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். இது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம் என அவர்கள் நினைக்கின்றனர்.

இந்த தம்பதி, ஒரு நாள் முழுவதும், பல்வேறு ஆரோக்கிய தொழில்நுட்ப சாதனங்களை ஒன்றிணைத்து பயன்படுத்தி, செல் பராமரிப்பை மேற்கொள்கிறது. இதற்காக ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் அறை மற்றும் நானோவி என்ற உபகரணம் ஆகியவை உதவுகிறது. வாரன் சில சமயங்களில் வீட்டில் இருந்தும் பணிபுரிகிறார். அவர், மதிய வேளையில் திடீரென குளிரான சூழலுக்குள் நுழைந்து கொள்கிறார்.

இவர்களுடைய மாலை வேளையானது, ஓய்வு மற்றும் மீட்டெடுப்பதில் கட்டமைக்கப்பட்டு உள்ளது. கைலா இதற்காக தனிப்பட்ட முறையில் ஆர்கானிக் உணவை தயார் செய்கிறார். இதன்பின்பு நீண்ட தூரம் அருகேயுள்ள மலை பிரதேசத்தில் நடை பயணம் மேற்கொள்கின்றனர். சூரியன் மறைய தொடங்கியதும், வெப்ப அறையில் நேரம் செலவிடுகின்றனர். வீட்டில் உள்ள அறைகளில் சிவப்பு விளக்குகளை ஒளிர விடுகின்றனர்.

இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வீட்டை ஒழுங்குப்படுத்தி கொள்கின்றனர். இரவு 9 மணி ஆனதும் இந்த தம்பதி படுக்கைக்கு சென்று விடுகிறது. இரவு முழுவதும் ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும் என உறுதிப்படுத்தி கொள்கின்றனர்.

9 மாதங்களாக டேட்டிங் செய்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி பெற்றோர் ஆவதற்கும் தயாராகி வருகிறது. இதுபற்றி கைலா கூறும்போது, குழந்தைகளை பெற்று கொள்வதற்காக பல ஆண்டுகளாக உடலை ஆயத்தப்படுத்தி வருகிறேன் என கூறுகிறார்.

அவர்களின் உடல் நலனிற்காக, பெற்றோர் இருவரின் ஆரோக்கியமும் முக்கியம் என அவர் வலியுறுத்தி கூறுகிறார். வருங்காலத்தில், தங்களுடைய வாழ்க்கை முறை கொள்கைகளுக்கு ஏற்ப குழந்தைகளையும் வளர்க்கும் நோக்கமும் உள்ளது. எனினும், சில மாற்றங்களையும் செய்து கொள்வோம் என கைலா கூறுகிறார்.

இதன்படி, அவர்களுடைய வாழ்க்கையை எளிமைப்படுத்துவோம். மொபைல் போன், டி.வி. திரையில் நேரம் செலவிட அனுமதி கிடையாது. வெளியே சென்று அழுக்காகும் வரை விளையாட செய்வோம். இயற்கையுடனும், சூரியனுடனும் இருக்க செய்வோம் என்கிறார்.

இந்த தம்பதியின் அணுகுமுறையானது, உயிரியல் முறையில் வயது முதிர்வு ஏற்படுவது குறையும் வகையில் அல்லது வயது பின்னே செல்வது ஆகியவற்றை கொண்ட பயோஹேக்கிங் முறையை ஒத்திருக்கிறது. இந்த நடைமுறை இளைஞர்கள், தனிநபர்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

இந்த முறையை பணக்கார தொழிலதிபரான பிரையன் ஜான்சன் உள்ளிட்டோர் பின்பற்றி வருகின்றனர். இதனால், ஒருவருடைய செல்கள் என்ன வயது அடைந்துள்ளது என துல்லியத்துடன் அளவிடப்படுகிறது. பல வியாதிகள் வருவதற்கான ஆபத்துகளை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இது உள்ளது. இதன்படி, ஓர் உயிரினம் வயது முதிரும்போது, அது எப்படி செயலாற்றும் என்பது கணிக்கப்படுகிறது. அதற்கேற்ப உணவு முறை, உடலை கட்டுக்கோப்பான வடிவத்தில் வைத்து கொள்வது உள்ளிட்டவற்றை பராமரித்து கொள்கின்றனர்.

Read Entire Article