கான்பூர்,
இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது.
இதில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் தொடக்க நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் (40 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (6 ரன்) களத்தில் இருந்தார்கள். 2-வது நாளான நேற்று முன்தினம் முழுக்க முழுக்க மழை பெய்ததால் மைதானம் முழுவதும் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. ஒரு பந்து கூட வீசப்படாமல் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்தானது.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று மழை பெய்யவில்லை. முந்தைய நாள் பெய்த மழையால் மைதானம் சேறும் சகதியுமாக காணப்பட்டது. அவற்றை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வெயில் இல்லாததால் மைதானத்தை காய வைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விளையாடுவதற்கு உகந்த வகையில் மைதானம் இல்லை என்று கூறி 3-வது நாள் ஆட்டத்தையும் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆரம்பம் முதலே அதிரடியில் களமிறங்கியது. முதல் 3 ஓவர்களிலேயே இந்தியா 50 ரன்களை கடந்தது.
இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக 50 ரன்கள் அடித்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
தற்போது வரை இந்தியா 99 ரன்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து அதிரடியாக விளையாடி வருகிறது. ஜெய்ஸ்வால் 63 ரன்களுடனும், கில் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ரோகித் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.