மாணவிகள் 73.4%
மாணவர்கள் 78.8%
பெரம்பூர்: நாகரிக வளர்ச்சி என்பது தனி மனிதன் மற்றும் அவரை சார்ந்த அனைத்து விஷயங்களையும் அடுத்தகட்ட நகர்வு மூலம் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதற்கு பயன்படுகிறது. ஒரு தனிமனிதன் மற்றும் அவரது குடும்பம் அடுத்தகட்டத்தை நோக்கி நகரும்போது சமூகமும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது. இவ்வாறு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது உள்ள செயற்கை நுண்ணறிவு காலம் வரை பல்வேறு வளர்ச்சிகளை இந்த சமூகம் கண்டுள்ளது.
இந்த வளர்ச்சிகள் அனைத்தும் மனிதர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதா அல்லது இந்த வளர்ச்சிகளால் மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று பார்த்தால் இரண்டுமே நடந்துள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. விஞ்ஞானம் வளர வளர பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து அது மனிதனுக்கு பயனுள்ள வகையில் இருந்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு நாட்டின் முதலமைச்சர் இறந்ததை கூட ஒரு நாள் கழித்து தெரிந்து கொண்ட காலம் மாறி, உலகில் எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை கூட அடுத்த நிமிடங்களில் நம்மால் தெரிந்து கொள்ளும் அளவிற்கு தற்போது விஞ்ஞானம் வளர்ந்துள்ளது.
அறிவியல் வளர வளர அது மனிதர்களின் வாழ்க்கை முறையை பல்வேறு விஷயங்களில் மாற்றி உள்ளது. மனிதர்களின் உணவு, உடை, பழக்க வழக்கம் என அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஞ்ஞானம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளதோ அதை ஒட்டி மற்ற துறைகளும் அதற்கு ஏற்ற வகையில் மாற்றம் கண்டு பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது.
விவசாயத்தில் வளர்ச்சி, கல்வியில் வளர்ச்சி, தொழில்நுட்பத்தில் வளர்ச்சி, மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்களோடு கூடிய வளர்ச்சி என தொழில்நுட்பம் வளர வளர பல்வேறு துறைகளிலும் வளர்ச்சிகளை கண்டு வருகிறோம். ஆனால் சில நேரங்களில் சில விஷயங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. மருத்துவ உலகம் வளர வளர மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரிக்க வேண்டும். ஆனால் தற்போது மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. 3 தலைமுறைக்கு முன்பு வரை 90 அல்லது 80 வயது வரை சராசரியாக வாழ்ந்த மனிதர்கள் கூட தற்போது 60 வயதை கடப்பதற்குள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மரணமடைகின்றன்ர.
இதில் எங்கே வளர்ச்சி உள்ளது என அனைவரும் கேள்வி கேட்கலாம். தொழில்நுட்பம் வளர வளர மனிதர்களின் உடல் ரீதியான தேவைகள் மற்றும் மன ரீதியான தேவைகள் மாறி அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்கு எமனாக வந்து விடுகிறது. உதாரணத்திற்கு இயற்கையான உணவுகளை தவிர்த்து, சுவைக்காக மட்டும் சத்து இல்லாத பல்வேறு உணவுகளை எடுத்துக் கொள்வதால் பிரச்னைகள் ஏற்படுகிறது.
இதேபோல், தற்போது உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் செல்போன் மூலம் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறை மற்றும் பள்ளி மாணவ மாணவியர் இந்த செல்போன்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவும் ஒரு விஞ்ஞான வளர்ச்சி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என எடுத்துக் கொண்டாலும், ஒரு சந்ததியினரின் வளர்ச்சியையும், ஒழுக்கத்தையும் சிதைக்கும் வகையில் தற்போது இந்த செல்போன்கள் உள்ளன. தற்போது உள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளிடமிருந்து செல்போன்களை பறிக்கவும் முடியாமல், அதில் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் முடியாமல் ஒருவித தவிப்பில் உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் இந்த செல்போன் மாணவர்கள் கையில் சென்றதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் கொரோனா.
கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிப்படைய கூடாது என்பதற்காக இணைய வழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்த கல்வி முறை கடைபிடிக்கப்பட்டது. இதன்மூலம் வீட்டில் இருந்தே ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களை மாணவர்கள் பயின்று வந்தனர். அந்த காலகட்டத்தில் வீட்டிலிருந்த பெற்றோர்கள் சிலர் தங்களது செல்போனை தங்களது குழந்தைகளுக்கு கொடுத்தனர். சிலர் ஸ்மார்ட்போன் வசதி போதவில்லை என குழந்தைகளின் கல்வி எந்த வகையிலும் பாதித்து விடக்கூடாது என்பதற்காக புதிய செல்போன்களை வாங்கி தங்களது பிள்ளைகளுக்கு கொடுத்தனர்.
சில பெற்றோர்கள் தங்களது பிரைவசி பாதிக்க கூடாது என்பதற்காக தங்களது செல்போனுங்களை தராமல், புது செல்போன்களை வாங்கி கொடுத்தனர். இவ்வாறு படிக்கும் மாணவ மாணவியரிடம் செல்போன்கள் கிடைப்பதற்கு கொரோனா ஒரு மிகப்பெரிய காரணமாக இருந்தது. அதன் பிறகு நோய் தொற்று காலம் முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்றபோதும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வாட்ஸ்அப் குழு அமைத்து பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள், வீட்டுப்பாடங்கள் உள்ளிட்ட தகவல்களை அதில் அனுப்பி வைக்கின்றனர்.
மேலும், பல மாணவர்களுக்கு இமெயில் ஐடி ஒன்று தயார் செய்து, தினமும் இமெயில் ஐடி மூலம் வீட்டுப் பாடங்கள் மற்றும் பள்ளிகள் குறித்த தகவல்களை அனுப்பி வருகின்றனர். இதனால் கொரோனா காலகட்டத்திற்கு பின்பும் தொடர்ந்து 90 சதவீத தனியார் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்துவதற்கு தனியார் பள்ளிகளும் ஒரு காரணமாக இருந்து வருகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் பெற்றோர்களுக்கு இதன் தாக்கம் பெரிய அளவில் தெரியவில்லை. மாணவர்கள் செல்போன்களை படிப்புக்காக பயன்படுத்துகின்றனர் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த ஸ்மார்ட் போனில் பேஸ்புக், இன்டாகிராம், டெலிகிராம், யூடியூப் போன்ற சமூகவலைதளங்களில் பல மாணவர்கள் மூழ்க தொடங்கினர். இவற்றில் வீடியோ பார்ப்பது மட்டுமின்றி பல மாணவர்கள் ரீல்ஸ் செய்யவும் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக சிறு வயதிலேயே காதல் வயப்படுவது, ஆண் நண்பர்களுடன் சாட்டிங் செய்வது என பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பெரம்பூரில் 3 பள்ளி மாணவிகள் தங்களது ஆண் நண்பர்களுடன் ஒருநாள் இரவு முழுவதும் பொது இடத்தில் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட செல்போன் ஒரு காரணமாக இருந்துள்ளது. முதல் தடவை பார்த்த போது தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்ட சிறுமிகள், அதன் பிறகு தொடர்ந்து வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசி பழகி அதன் பிறகு டேட்டிங் என்ற ரீதியில் இவ்வாறு தனிமையில் இருந்துள்ளனர்.
போலீசார் அவர்களை பிடித்து மாணவிகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், பல பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் தங்களது செல்போன் எண்களை தங்களுடன் படிக்கும் மாணவ மாணவியருடன் பரிமாறிக் கொண்டு தனியாக வாட்ஸ் அப் குழு அல்லது தனிப்பட்ட முறையில் சாட்டிங் செய்து வருகின்றனர்.
மேலும் மாணவ பருவத்திலேயே சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் உள்ளிட்டவற்றில் தங்களது தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், அதிகளவில் லைக் பெருவதற்காகவே பலர் ஆபாசமாக வீடியோ வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இது படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை மட்டும் பாதிக்காமல் அவர்களது வாழ்க்கையையே பாதிப்படைய செய்கிறது. தினம் தினம் பல்வேறு காவல் நிலையங்களில் பள்ளி மாணவ மாணவிகள் குறித்த வழக்குகள் புகார்களுக்கு வருகின்றன. அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினால் 14 முதல் 16 வயதுடைய மாணவ மாணவியர் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுவது அல்லது சிறு வயதிலேயே மாணவிகள் கர்ப்பம் அடைவது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குவிக்கின்றன.
இவை அனைத்திற்குள் செல்போன்கள் முக்கிய காரணமாக உள்ளது. அதுமட்டும் இலலாமல் நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்பதை யூகிக்க முடியாத வயதில் இருக்கும் மாணவ மாணவியர் தங்களது வயதிற்கு மீறிய பல விஷயங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்கின்றனர். இதனால் அவர்களது ஹார்மோன்கள் அவர்களது வயதை மீறி அவர்களை செயல்பட வைக்கிறது. இது போன்ற பல விஷயங்களுக்கு செல்போன்கள் முக்கிய காரணமாக விளங்குகிறது. தற்போது பெரும்பாலான தனியார் பள்ளிகளில் செல்போன்கள் மூலம் வீட்டுப்பாடம் தருவதால் பெற்றோர்களும் பிள்ளைகளிடத்திலிருந்து செல்போன்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்மார்ட் போன் மற்றும் சமூகவலைதள பயன்பாடு குறித்து தொண்டு நிறுவனம் சார்பில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள 605 மாவட்டங்களில் 17,997 கிராமங்களுக்கு சென்று 6 லட்சத்து 49 ஆயிரத்து 491 மாணவ மாணவிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கை ஆண்டு கல்வி நிலை அறிக்கை 2024ல் இடம் பெற்றுள்ளது. அதில் 14 முதல் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஸ்மார்ட் போன் அதிகளவில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதில் நாடு முழுவதும் 82.20 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரியும். பெண்களை விட அதிகமான ஆண் குழந்தைகள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் 14 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 57 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் கல்வி நோக்கத்திற்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்கள் என்றும், 76 சதவீதம் மாணவ மாணவியர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்காக ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் மாணவர்கள் 78.8% மாணவிகள் 73.4 சதவீதமும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கேரளாவில் 80% குழந்தைகள் கல்வி பயன்பாட்டிற்காக மட்டுமே ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள் என்றும் அதில் அங்கு 90% மாணவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும், 14 வயதுடையவர்கள் 27% பேரும், 16 வயது உடையவர்கள் 38% பேரும் சொந்தமாக ஸ்மார்ட் போன் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் 14 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விகிதம் 19 சதவீதத்திலிருந்து கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு இந்தியாவில் கிராமப்புறங்கள் வரை பரவி உள்ளதாகவும், கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்பிற்காகவும், இணையவழி கல்விக்காகவும் மாணவர்களின் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக மாணவர்கள் படிப்பிற்காக பயன்படுத்துவதை விட சமூக வலைதளங்களுக்காக பயன்படுத்துவது வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது. எனவே தனியார் பள்ளிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மாணவர்கள் பள்ளிக்கு செல்போன்கள் கொண்டுவர தடை விதிக்க வேண்டும். மேலும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு எந்தவித வீட்டு பாடம் மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் அனுப்புவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. இது மாணவ மாணவியரின் கற்றலுக்கு முக்கியத்துவம் தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ஒழுக்கம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெற்றோர் கவனிக்க வேண்டும்
பள்ளி மாணவர்கள் அதிகமாக செல்போன் பயன்படுத்துவது குறித்து புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் கூறுகையில், ‘‘தனது பிள்ளைகளுக்கு செல்போனை வாங்கி தரும் பெற்றோர்கள் சில விஷயங்களை உற்று கவனிக்க வேண்டி உள்ளது. இது நாம் பெற்ற பிள்ளைகள் மீது சந்தேகம் கொள்வது போன்று ஆகாது. ஆனால் அதே நேரத்தில் நமது பிள்ளைகளுக்கு நாம் நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கித் தருவது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால் படிப்பு மற்றும் பாதுகாப்பு கருதி சிலர் வாங்கித் தருகிறார்கள் என்றால் கண்டிப்பாக தங்களது பிள்ளைகளின் செல்போன் பாஸ்வேர்ட் பெற்றோர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் பிள்ளைகள் சமூக வலைதளங்களில் உள்ளார்கள் என்றால் அவர்கள் எந்த ஐடியில் உள்ளார்கள் எது போன்ற நண்பர்களை தொடர்கிறார்கள் எது போன்ற செய்திகளை அவர்கள் பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். மேலும் வாட்ஸ் அப் குழுவில் நண்பர்களுடன் பேசும்போது எது போன்ற தகவல்களை அவர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். பிரைவசி என்பது அனைவருக்கும் உரியது ஆனால் அந்த பிரைவசி எந்த வயதில் நாம் குழந்தைகளுக்கு தர வேண்டும் என்பதை உற்று நோக்க வேண்டும்.
எனது குழந்தைகள் விஷயத்தில் நான் தலையிடுவதில்லை எனக்கூறும் பெற்றோர்கள் கண்டிப்பாக ஒரு காலகட்டத்தில் குழந்தைகள் செய்யும் தவறுக்காக கண்ணீர் வடிக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். எனவே குறைந்தபட்சம் பள்ளி படிப்பை முடிக்கின்ற வரையிலாவது குழந்தைகளை பெற்றோர்கள் கவனமுடன் கையாள வேண்டும்,’’ என்றார்.
கிராமப்புறங்களில் அதிகரிப்பு
நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 2018ம் ஆண்டில் கிட்டத்தட்ட 90 சதவீத கிராமப்புற குடும்பங்கள் எளிமையான போன்களை பயன்படுத்துவதும், 36 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதும் தெரிய வந்தது. இது 2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அப்படியே மாறி ஸ்மார்ட் போன்கள் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 74 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் ஸ்மார்ட் போன்களைதான் அதிகம் பேர் பயன்படுத்துவது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
வகுப்பறையில் ரீல்ஸ்
செல்போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக தற்போது சமூகத்தில் மாறிவிட்டது. மாணவர்கள் படிக்கும்போது அது அவர்களுக்கு எந்த வகையிலும் தடையாக இருந்து விடக்கூடாது. அதே நேரத்தில் அவர்களின் ஒழுக்கம் சார்ந்த விஷயத்திலும் பள்ளிகள் கவனமாக இருக்க வேண்டும். அதனால் குறைந்தபட்சம் 12ம் வகுப்பு வரையிலாவது பள்ளிகளில் செல்போன்களுக்கு தடை விதிக்கலாம். பள்ளிகளிலேயே பல மாணவர்கள் தற்போது ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை காண முடிகிறது. இது, அவர்களது கல்வியை பாதிக்கிறது. இதில் பெற்றோர் கவணனம் செலுத்த வேண்டும். கல்லூரியில் சேர்ந்து மாணவர்கள் செல்லும்போது அவர்கள் செல்போனை பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு அப்போது ஓரளவுக்கு மன பக்குவம் வந்துவிடும் என்பதால் தனியார் பள்ளிகள் இதை பரிசீலனை செய்யலாம்.
குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு
10 வருடங்களுக்கு முன்பு வரை இருந்த காலகட்டம் வேறு தற்போது உள்ள காலகட்டம் வேறு அந்த காலத்தில் தவறு செய்ய வாய்ப்புகள் குறைவு. ஆனால் இந்த காலகட்டத்தில நம்மை சுற்றி எதிர்மறையான சிந்தனைகளும் தேவையில்லாத தகவல்களும் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. எனவே இந்த காலகட்டத்தில் பிள்ளைகளை வளர்ப்பது என்பது மிகவும் ஒரு சவாலான விஷயம் எனவே அதனை பெற்றோர்கள் புரிந்து கொண்டு பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். தற்போது 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சம்பந்தமாக காவல் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு வழக்குகளையும் பார்க்கும்போது ஏதோ ஒரு வகையில் செல்போன்கள் மூலம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்கள் அதற்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. எனவே பெற்றோர்கள் வேறு யாருக்கோ ஒரு பிரச்சனை நடக்கிறது என்று இல்லாமல் நாளைக்கு அதே பிரச்சனை நமது வீட்டில் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் இந்த கண்காணிப்பு என்பது அவர்களை சந்தேகப்படும் நோக்கில் இல்லாமல் ஒரு வழிகாட்டி போல பெற்றோர்கள் செயல்பட வேண்டும்.
The post 14 முதல் 16 வயதுள்ள 76 சதவீத சிறுவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர்: ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.