கேரளா: தந்தை பெரியார் முன்னெடுத்த வைக்கம் சத்தியா கிரகத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக வைக்கம் மகாதேவர் கோயில் பாரம்பரிய விழாவில் அனைத்து சாதியினரும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் வடக்கும் புறத்து பட்டு விழாவில் அணைத்து சமூகத்தினரையும் பங்கேற்க விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். கேரளம் மாநிலம் கோட்டையும் மாவட்டத்தில் உள்ள வைக்கம் மஹாதேவர் கோவிலில் நெடுங்காலமாக நடைபெற்று வரும் வடக்கும் புறத்து பட்டு நடைபெறுகிறது.
இந்த கோவிலில் நடைபெறும் காலப்பொலி, வடக்கும் புறத்து பட்டு ஆகிய திருவிழாக்கள் மிகவும் புகழ்பெற்றவை. இதில் கொடுங்கல்லூர் தேவி அம்மனை கொண்டாடும் வகையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வடக்கும் புறத்து பட்டு விழா சிறப்புமிக்கது. கொடுங்கல்லூர் பகவதி அம்மன் சிலையை மஹாதேவர் கோவிலுக்கு யானை சுமந்து செல்ல அத்துடன் குத்துவிளக்கேற்றி 64 பெண்கள் ஊர்வலமாக செல்லும் நிகழ்வு தான் வடக்கும் புறத்து பட்டு. இந்த விழா 12 நாட்கள் நடைபெறும் நிலையில் இதில் பங்கேற்க சாதி அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
விழாவின் முதல் 4 நாட்கள் நாயர் சமூக பெண்களும் அடுத்த 2 நாட்கள் தீவரா சமூக பெண்கள் விளக்குகளை ஏந்தி செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஈழவர், குலையர், விஸ்வகர்மா, வணிக வைசியர் சங்க சமூக பெண்களுக்கு தலா ஒருநாள் ஒதுக்கப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு வடக்கும் புறத்து பட்டு விழா வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்குகிறது. பெரியார் முன்னெடுத்த வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டுவிழாவை கொண்டாடும் விதமாக இந்த முறை வைக்கம் மகாதேவர் கோவிலில் விழாவின் அனைத்து நாட்களிலும், அனைத்து சமூக பெண்களையும் அனுமதிக்க விழா குழு முடிவு செய்துள்ளது. சாதி வேறுபாடின்றி அனைத்து சமூகத்தை சேர்ந்த பக்தர்களும் தங்கள் பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டும் என விழா குழு சாதி அமைப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளது. வைக்கம் மஹாதேவர் கோவிலில் காலம் காலமாக புழக்கத்தில் இருந்த சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு தந்தை பெரியாரின் வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழா முடிவுரை எழுதி இருக்கிறது என்றால் அது மிகை இல்லை.
The post 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் வைக்கம் பகவதி அம்மன் கோயில் விழா: அனைத்து சமூக பெண்களையும் அனுமதிக்க விழாக் குழு முடிவு appeared first on Dinakaran.