110 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட மண்டபம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்

1 week ago 3

*பயணச்சீட்டு முன்பதிவு மையம் இல்லை

*பிளாட்பாரம் மேற்கூரைகள் பற்றாக்குறை

மண்டபம் : மண்டபம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிகேற்ப பயணச்சீட்டு முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என மண்டபம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டபம் பேரூராட்சி பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

அதுபோல மண்டபம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், கேந்திர வித்யாலயா பள்ளி மற்றும் இந்திய கடலோர காவல் படை தளம் உள்பட மத்திய கடலோர ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், உ.பி, பீகார் போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதனையடுத்து இந்த பகுதியில் வசிக்கக்கூடிய பொது மக்களின் வசதிக்கேற்ப மண்டபம் பகுதியில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்தை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் இருந்து வெளிமாநிலத்தில் பணியாற்றக் கூடிய அலுவலர்களும், வர்த்தக ரீதியாக மண்டபம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் திருப்பூர், கோவை,சென்னை, திருச்சி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் பாலக்காடு போன்ற பகுதிகளின் தொடர்புடைய பொதுமக்கள் அதிகமானோர் ரயிலில் பயணித்து வருகின்றனர்.

அதுபோல ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை மற்றும் சென்னை அருகேயுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் மற்றும் திருச்செந்தூர், பழநி, குருவாயூர் போன்ற ஆன்மீக தலத்திற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயிலில் சென்று வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் முன்பதிவு மையம் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு பதிவு இல்லாத ரயிலில் பயணித்து வருகின்றனர்.

அதுபோல 110 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தில் பல கோடி பயணிகள் ரயிலில் பயணித்து வந்துள்ளனர். இந்த மண்டபம் ரயில் நிலையம் ராமேஸ்வரத்திற்கு ஒரு துணை ரயில் நிலையமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையம் திறக்கப்பட்ட காலங்களில் இருந்து, இன்றைய வரை தரம் உயர்த்தப்படாமல் இந்த ரயில் நிலையம் பழமையாகவே இயங்கி வருகிறது.

இதனால் மண்டபம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கு முன் பதிவு மையம் அமைக்க வேண்டும் என பல நாட்களாக ரயில்வே வாரியத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதுபோல முன்பதிவு மையம் இதுவரை இல்லாததால் இந்த பகுதியைச் சேர்ந்த பயணிகள் ராமேஸ்வரம், பாம்பன், ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு ஒரு மணி நேரம் வாகனத்தில் சென்று அங்கு பல மணி நேரம் காத்திருந்து முன்பதிவு செய்து வருகின்றனர். அதுபோல தக்கல் பயணச் சீட்டு என்ற ஒரு முறையவே பயன்படுத்த முடியாமல் இந்த பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.

மேலும் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து தொடங்கி விட்டதால் அதிகமான ரயில்கள் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் ரயில் நிலைய வழியாக சென்னை,கோவை, கேரளா உட்பட பல மாநிலங்களுக்கு ரயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது.

இந்நிலையில் ஒன்றிய அரசு கீழ் இயங்கி வரும் ரயில்வே வாரியத்தில் எந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்தாலும் பல ரயில்வே நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தவில்லை. அதன் ஒரு பகுதியாக மண்டபம் ரயில்வே நிலையம் கடந்த 111 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட போது எந்த வசதிகள் இருந்ததோ, அதேபோல் பழமையான கட்டிடம், குறைந்த தொலைதூரத்தில் உள்ள பழைய பிளாட்பாரம் தான் உள்ளது.

இன்றைய காலத்தில் விடப்படும் ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அளவிற்கு கூட நடைமேடைகள் இல்லாமல், பிளாட்பாரங்களுக்கு ஏற்ப மேற்கூரைகளும் இல்லை.மேலும் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தாமல் இன்று வரை உள்ளது என பயணிகள் குற்றம் சட்டப்பட்டுள்ளனர்.

ஆதலால் மண்டபம் ரயில் நிலையத்தை மேம்படுத்தி மண்டபம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களும் மற்ற அலுவலர்கள், பயணிகள் வசதிக்கேற்ப ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 110 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட மண்டபம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article