10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

2 months ago 9

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6வது இயலில் இருந்து கேள்விகள் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இயலில் உள்ள ‘பன்முகக் கலைஞர்’ பாடத்தை மாணவர்கள் முழுமையாகப் படித்துக் கொள்ள வேண்டும். 9 இயல்களில் உள்ள 45 ஒரு மதிப்பெண் வினா விடைகளைப் படித்தால் குறைந்தபட்சம் எட்டு மதிப்பெண்கள் பெற்று விட முடியும். அதுபோல மனப்பாடப் பாடல்களை நன்றாகப் படித்துக்கொண்டால் இரண்டு கட்டாய வினாக்களை எழுதிவிட முடியும்.

‘பள்ளியில் நான்’ ‘வீட்டில் நான்’ ‘மாணவர்கள் பின்பற்ற வேண்டிய அறங்கள்’ மற்றும் ‘நன்மைகள்’ போன்று சொந்தமாக விடை அளிக்கும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதற்கு மாணவர்கள் தங்கள் கோணத்தில் சொந்தமாக எழுதினால் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். விடைக்கேற்ற வினா அமைத்தல், இரண்டு மதிப்பெண் வினாக்களில் கேட்கப்படுகிறது. மிகவும் எளிமையான பகுதியான இதனை மாணவர்கள் தவற விடக்கூடாது. கலைச்சொல் அறிவோம் பகுதியில் இருந்து இரண்டு ஆங்கிலச் சொற்கள் கொடுத்து தமிழில் மொழிபெயர்க சொல்லும் வினாக்கள் கட்டாயம் கேட்கப்படும். பத்தி கொடுத்து மூன்று கேள்விகள் கேட்கப்படும் வினாவும் மிக எளிமையானது. காட்சியை கொடுத்து கவிதை எழுதும் பகுதியைச் சற்று முயற்சி செய்து சிறப்பாக எழுதினால் ஐந்து மதிப்பெண்கள் நமக்கு எளிமையாக கிடைத்துவிடும்.

தமிழ்ப் பாடத்தைப் பொறுத்தவரை சொந்தமாக விடையளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதால் கவிதை எழுதுவது, கட்டுரை எழுதுவது, ஆகியவற்றை பலமுறை பயிற்சி எடுத்துக்கொள்வது அவசியம். நூலக உறுப்பினர் படிவம், மேல்நிலைச் சேர்க்கை விண்ணப்பப்படிவம், பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப்பட்டியல், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினர் சேர்க்கைப் படிவம் ஆகிய நான்கில் ஒன்று வரவாய்ப்புள்ளது. இவற்றில் அதிக பயிற்சி எடுத்துக் கொண்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். வாழ்த்துக்கள்!

The post 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? appeared first on Dinakaran.

Read Entire Article