சென்னை: குணா, தேவர் மகன் உள்ளிட்ட 109 திரைப்படங்களின் உரிமை விவகாரம் தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா நேற்று உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார். மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்திருந்த வழக்கில், கடந்த 1997 ஆண்டு இளையராஜாவின் மனைவி பெயரில் உள்ள இசை நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
அந்த ஒப்பந்தத்தின் படி தேவர் மகன், பாண்டியன் பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் எங்களது அனுமதி இல்லாமல் அந்த படங்களின் பாடல்கள் தற்போது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, எங்களிடம் உரிமை உள்ள படங்களின் பாடல்களை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக இளையராஜாவின் இசை நிறுவனம் மற்றும் இளையராஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் சாட்சியம் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக நேற்று இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இரண்டாவது மாஸ்டர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் சரவணனுடன் ஆஜரானார்.
அவரிடம் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை நடத்தினார். அதற்கு சாட்சி கூண்டில் ஏறி இளையராஜா பதிலளித்தார். அவரிடம் பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாவும், சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கபட்டன.
குறுக்கு விசாரணையின் போது எத்தனை பங்களாக்கள் உள்ளது என்ற கேள்விக்கு இளையராஜா, எனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், உலகலாவிய பொருட்களை பற்றி எனக்கு தெரியாது என்றார். பேர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது உண்மையா என்ற கேள்விக்கு, அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என்று பதிலளித்தார். இளையராஜாவிடம் ஒரு மணி நேரம் நடந்த சாட்சி விசாரணை நிறைவு பெற்றதையடுத்து, மாஸ்டர் நீதிமன்றம் மீண்டும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டுள்ளது.
The post 109 திரைப்பட பாடல்கள் உரிமை விவகாரம் இசையமைப்பாளர் இளையராஜா சாட்சியம்: ஐகோர்ட் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் appeared first on Dinakaran.