108வது பிறந்தநாளை ஒட்டி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மரியாதை

2 weeks ago 4

சென்னை: அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் 108வது பிறந்த நாளையொட்டி நேற்று காலை சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கும், ஜெயலலிதா சிலைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அந்த வளாகத்தில் அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தில் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த 108 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி ஊட்டினார். அன்னதானம் மற்றும் மகளிருக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம் உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். அதேபோல் சென்னை அண்ணாசாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர்.

The post 108வது பிறந்தநாளை ஒட்டி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article