திண்டுக்கல்: “உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிஹார் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள பெரிய மாநிலங்கள், தமிழகத்தைப் போன்று 100 நாள் வேலைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மத்திய அரசிடம் அதிக நிதி பெறுவது எப்படி என ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, தமிழக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறைகூறுவது எந்தவிதத்தில் நியாயம்?” என அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதுபோல், இதர மாநிலங்களை விட தமிழகம் அதிகம் நிதி பெற்றுள்ளது என்பது உண்மையே. இதற்கு தமிழக அரசின் சிறப்பான செயல்பாடே காரணம்.