தஞ்சாவூர், ஏப்2: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 100 நாள் வே லைக்கான நிதியை தராத ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய நூறுநாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ்பயனாளிகளுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த வேலைக்கான கூலி தரப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே உடனடியாக நிலுவையில் உள்ள கூலியை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை: 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு 4 மாத சம்பள பாக்கி வழங்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உள்பட 600க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றியத் தலைவர் தனசீலி ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி தொடங்கி வைத்தார். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும், சம்பளத்தை 600 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
கும்பகோணம்: கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நூறு நாள் சம்பளத்தை வட்டியுடன் உடனே வழங்க வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி மற்றும் மாவட்ட செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் தலைமையிலும், நிர்வாகிகள் கலையரசன், தாமரைச்செல்வி மற்றும் வடிவேல் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் ராஜா உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு வந்த காவல்துறைக்கும், விவசாய தொழிலாளர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 5 மாத சம்பள பாக்கியை உடனே வழங்கவும், ஓராண்டிற்கான வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்திடவும், வலியுறுத்தப்பட்டது.
பேராவூரணி: பேராவூரணி தபால் அலுவலகம் எதிரே ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு 4 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் , வேலை நாட்களை குறைக்க கூடாது ,பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, பணக்காரர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் மோடி அரசே, ஏழைகள் வயிற்றில் அடிக்காதே என முழக்கம் எழுப்பப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப் பள்ளி இந்தியன் வங்கி கிளை எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. திருக்காட்டுப்பள்ளியில் இந்தியன் வங்கி எதிரில் பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்கம் ராமச்சந்திரன் தலைமை வகித்தார், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் மாவட்ட நிர்வாக குழு உறு ப்பினர் மற்றும் மாதர் சங்க மாவட்ட தலைவர் கண்ணகி துவக்கி வைத்தார்.
The post 100 நாள் வேலைக்கான கூலியை வழங்கக்கோரி விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.