புதுடெல்லி: ஊடகங்களில் வந்த செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இது பற்றி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: ஏழைகளின் உயிர் நாடியான 100 நாள் வேலை திட்டத்தை அழிக்க மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. 100 நாள் திட்டத்துக்கு முதல் நிதியாண்டின் முதல் 6 மாதங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 60% குறைப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரான குற்றம்.
அடுத்த நிதியாண்டில் தேவை அதிகமாக இருக்கும் போது ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து சுமார் ரூ.25,000 கோடியை பறிக்க ஒன்றிய மோடி அரசு முயற்சிக்கிறது.அத்தகைய உச்சவரம்பை விதிப்பது 100 நாள் திட்டத்தை தங்களுடைய வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் ஏழைகளை பாதிக்காதா?
சமீபத்திய அறிக்கையின்படி, 7 % குடும்பங்களுக்கு மட்டுமே வாக்குறுதியளிக்கப்பட்ட 100 நாட்கள் வேலை கிடைத்துள்ளது. ஆதார் அடிப்படையிலான ஊதியம் என்ற நிபந்தனையின் பேரில், கிட்டத்தட்ட 7 கோடி பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களை இந்த திட்டத்திலிருந்து விலக்கப்பட்டதற்குக் காரணம் என்ன? 10 ஆண்டுகளில் மொத்த பட்ஜெட்டில் இதற்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டது? 100 நாள் திட்டத்திற்கான செலவினங்களைக் குறைப்பதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும். இவ்வாறு கார்கே குறிப்பிட்டுள்ளார்.
The post 100 நாள் வேலை திட்ட செலவை 60 % ஆக குறைக்க முயற்சி: ஒன்றிய அரசு மீது கார்கே சாடல் appeared first on Dinakaran.