சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 என்னும் திட்டத்தின் கீழ், 234 தொகுதிகளில் இருக்கும் அரசுப்பள்ளிகளுக்குச் சென்று 77 வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், டி.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை வளர்மதி பேஸ்புக் பக்கத்தில், எங்கள் பள்ளியில் 33 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ், ஆங்கிலம் சரளமாக வாசிப்பார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்காக வருகின்றபோது எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களின் கற்றல் வாசிப்புத் திறனை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று, பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், அனைத்து மாணவர்களும் சரளமாக வாசிக்கின்றார்கள், எழுதுகின்றார்கள், தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறினார். அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களே, நீங்களும் அழையுங்கள். அழைப்பை ஏற்று சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உங்களின் பள்ளிகளுக்கு வருகை புரிவார்கள். மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்வார்கள். நானும் வருவேன். இன்றே பயணத்தைத் தொடங்குவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இதனத்தொடர்ந்து 100 நாள் சவாலின் அடிப்படையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைத் திறன் மதிப்பீடு செய்யப்படுவதாக, தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதுகுறித்து தொடக்கப் பள்ளி இயக்குநர் கூறும்போது, ‘‘தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய திறன்களில் தயாராக உள்ளதாக 4,552 தொடக்கப் பள்ளிகள் தெரிவித்துள்ளன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைத் திறனை அளவிட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது’’ என்றார். அதனடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களால் (தொடக்கக் கல்வி) தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட பள்ளிகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வழங்கிய மதிப்பீட்டு வினாத்தாள்களைக் கொண்டு வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் மாணவர்களின் திறன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் முற்கட்டமாக மொத்தம் 4 ஆயிரத்து 552 பள்ளிகளில் 80 ஆயிரத்து 898 மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திறன் ஆய்வு நடைபெற்றது. 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழில் உயிர், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்களை வாசித்தல், ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகள் மற்றும் பெரிய எழுத்துக்கள் வாசித்தல், சிவிசி (consonant-vowel-consonant in three-letter words) வார்த்தைகள் வாசித்தல், கணிதத்தில் ஒன்று மற்றும் இலக்க எண்களை கண்டறிதல், கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளை செய்ய சொல்லுதல் போன்ற அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு 65க்கும் அதிகமான உயிர், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்களை வாசித்தல், ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகள் மற்றும் பெரிய எழுத்துக்கள் வாசித்தல், 2 இலக்க எண்களை கண்டறிதல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை செய்ய சொல்லுதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வுகளை தொடங்க இருப்பதாகவும், மேலும் முதற்கட்டமாக ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு வருகிற ஜூன் மாதம் மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சி ஒன்று நடத்தி கவுரவிக்கப்பட இருப்பதாகவும் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை
நிலை 1
வகுப்பு 1 14,647
வகுப்பு 2 14,750
வகுப்பு 3 15,635
மொத்தம் 45,032
நிலை 2
வகுப்பு 4 17,883
வகுப்பு 5 17,983
மொத்தம் 35,866
The post 100 நாட்களில் 100% வாசித்தல் திட்டம்: 4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின் திறன் ஆய்வு; முதலில் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா appeared first on Dinakaran.