100 கோடி நில அபகரிப்பு வழக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன்: 23ம் தேதி ஆஜராக உத்தரவு

1 day ago 4

சென்னை: 100 கோடி நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வருமான வரித்துறை வரும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார்பதிவாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி வாங்கியதாக விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கிடைக்காததால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். அவரை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 2024ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அடுத்த மாதமே அவரது சகோதரர் சேகரும் கைது செய்யப்பட்டார்.

தற்போது இந்த விவகாரத்தில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்களை வைத்து விசாரணை நடக்கிறது. வருமான வரி புலனாய்வு பிரிவில் இருக்கும் பினாமி தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலம் விஜயபாஸ்கரின் பினாமி சொத்து இல்லை எனவும், பினாமி பரிவர்த்தனை மூலமாக வாங்கப்படவில்லை எனவும் நிரூபிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதற்காக விஜயபாஸ்கர், நில உரிமையாளர்கள் பிரகாஷ் மற்றும் ஷோபனா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு விஜயபாஸ்கருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

தற்போது நில அபகரிப்பு வழக்கும் சேர்ந்துள்ளதால் அவர் சட்டரீதியாக பல சவால்களை சந்திக்க நேரிடும். அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளதால் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அதிமுகவை நோக்கி திரும்பாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.

The post 100 கோடி நில அபகரிப்பு வழக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன்: 23ம் தேதி ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article