100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடத்தை ₹50 கோடி மதிப்பில் தரம் உயர்த்த முடிவு; 20 கிரவுண்ட் இடத்தில் நவீன வசதிகளுடன் அமைகிறது

1 week ago 3

சென்னை, பிப்.15: நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடத்தில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடம், கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் தென்சென்னை பகுதியில் இருக்கும் ஆட்டிறைச்சி கூடமாக இது விளங்கி வருகிறது. 2008ம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போதைய துணை முதலமைச்சராக இருந்தபோது, இந்த ஆட்டிறைச்சி கூடத்தை ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்ட நவீன ஆட்டிறைச்சிக் கூடமாக தரம் உயர்த்தி திறந்து வைத்தார்.

தினசரி 300க்கும் மேற்பட்ட ஆடுகள், ஒவ்வொரு மாதமும் 10,000 ஆடுகள் இங்கே இறைச்சிக்காக அறுக்கப்பட்டு வருகிறது. தென் சென்னை பகுதிகளான சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இந்த கூடத்திலிருந்து ஆட்டிறைச்சி அனுப்பப்படுகிறது. இந்நிலையில் ஆட்டிறைச்சி கூடம் நவீனபடுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள இந்த நவீன ஆட்டிறைச்சி கூடத்தை ஒட்டி 9 கிரவுண்ட் இடம் கடந்த ஆட்சி காலத்தில் குப்பை கொட்டும் இடமாக இருந்தது. இது அடர்த்தியான பொதுமக்கள் வசிக்கும் இடமாக இருந்ததால் குப்பை கொட்டும் இடம் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த 2 கிரவுண்ட் இடத்தில் மாநகராட்சியின் சிறிய கட்டிடங்கள் உள்ளது.

முதல்வரின் வழிகாட்டுதலோடு சென்னை மாநகராட்சி நிர்வாகம், 20 கிரவுண்ட் இடத்தில் ரூ.50 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த ஆட்டிறைச்சி கூடத்தை மேம்படுத்தி நவீன ஆட்டிறைச்சி கூடமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிறிய அளவிலான கடைகள், கழிவுகளை சுத்திகரிக்கும் வசதி ஆகியவைகளும் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் தென்சென்னை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக ஆடுகள் அறுப்பது தவிர்க்கப்பட்டு, இந்த நவீன கூடத்தை பயன்படுத்தும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், துணை ஆணையர் (பணிகள்) சிவகிருஷ்ணமூர்த்தி, வட்டார துணை ஆணையர் (தெற்கு) அமீத், சென்னை மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், நகர நல அலுவலர் ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் மோகன்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கஞ்சா கருப்பு வருத்தம்
அரசு மருத்துவனை குறித்து பேசிய கஞ்சா கருப்பு, நேற்று பொது நிகழ்ச்சியில் என்னை நேரில் சந்தித்து, தவறான தகவலை கூறியதற்காக வருத்தப்படுகிறேன். என்னை மன்னிக்க வேண்டும் என்றார். அரசு மருத்துவமனைகளில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார். தற்போது அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை அளிக்கும் தரம் உயர்த்துள்ளதால், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஒரு சிலர் சிகிச்சை பலனளிக்காமல் இறப்பது என்பது இயல்பு. அதை வைத்து இப்படி பொய்யான குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஒன்றிய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் மட்டும் யாரும் இறப்பதில்லையா. புள்ளிவிவரத்தோடு பேசினால் அவரோடு நேருக்கு நேர் வாதிட நான் தயாராக இருக்கிறேன், என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

The post 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடத்தை ₹50 கோடி மதிப்பில் தரம் உயர்த்த முடிவு; 20 கிரவுண்ட் இடத்தில் நவீன வசதிகளுடன் அமைகிறது appeared first on Dinakaran.

Read Entire Article