
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். திருச்செந்தூரில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அதிக தூரத்திற்கு கடல் உள்வாங்குவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பவுர்ணமி தொடங்கிய நிலையில், திருச்செந்தூரில் கோவில் கடற்கரை பகுதியில் உள்ள செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 100 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதனால் பாசி படர்ந்த பச்சை நிற பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன. இந்த பாறைகள் மீது பக்தர்கள் ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.