கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் கண்டக்குழிவிளையை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு ஷாஜினி (வயது 15) என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். ஷாஜினி அருகில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்தில் நடந்த சிறப்பு வகுப்புக்கு சென்றார்.
பின்னர் வகுப்பு முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த மாணவி தனது தம்பியுடன் மாடியில் உள்ள அறையில் படித்து கொண்டு இருந்தார். பிறகு தம்பி சாப்பிட தரை தளத்துக்கு வந்து விட்டார். சிறிது நேரம் கழித்து தந்தை சசிகுமார் வீட்டின் மேல்மாடிக்கு சென்றார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதாவது ஷாஜினி அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனே சசிகுமார் விரைந்து செயல்பட்டு அவரை மீட்டு புதுக்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு ஷாஜினியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மேலும் இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.