10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம்: தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள் கைது

22 hours ago 1

நாகை,

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதன்பின் மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. 10-ம் வகுப்பு தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்து 13,036 பேர் எழுதி வருகின்றனர். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87,148 மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் 272சிறை கைதிகளும் அடங்குவர். ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவு மே 19-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று 10ம்வகுப்பு ஆங்கில தேர்வு நடைபெற்றது.  இந்தநிலையில் நாகை அருகே உள்ள வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனித்தேர்வரான சுகந்திக்கு பதிலாக செல்வாம்பிகை என்பவர் தேர்வு எழுதி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் தேர்வர் செல்வாம்பிகை மீது சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவரிடம் விசாரித்தனர். அதற்கு தேர்வரான செல்வாம்பிகை முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தாக கூறப்படுகிறது.

அதிகாரிகளுக்கும் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. ஹால்டிகெட்டை பரிசோதனை செய்த அதிகாரிகள் ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து தனது தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மகளை கல்வித்துறை அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் செல்வாம்பிகையை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகளை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article