10 துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு: உரிய காலத்துக்குள் பணிகளை முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

5 hours ago 3

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை, இயற்கை வளங்கள் துறை, போக்குவரத்துத் துறை, உயர்கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து சுமார் நான்கு மணி நேரம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதலமைச்சர், நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு, நீடித்த நிலையான சுரங்க கொள்கையை உருவாக்கும் பணிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டுத் திறன், சேவை வழங்கல் மற்றும் நிதி நிலையை மேம்படுத்தும் திட்டம், சமூக நீதி விடுதிகளின் செயல்பாடுகள், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் வளர்க்கும் திட்டம், அமைப்புசார நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது, ஆதிதிராவிட, பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் செயல்பாடுகள், புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் கட்டுமானப் பணிகள் போன்ற பல்வேறு துறைகளின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, விவரங்களை கேட்டறிந்தார்.

துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் உரிய காலத்திற்குள் விரைவாக முடித்திட உயர் அலுவலர்களை அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், உள்ளிட்ட அரசு துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post 10 துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு: உரிய காலத்துக்குள் பணிகளை முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article