10 சட்ட மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்; ஆளுநர் பதவி விலக வேண்டும்: வரலாற்று தீர்ப்பு என தலைவர்கள் வரவேற்பு

1 week ago 5

சென்னை: 10 சட்ட மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது எனவே ஆளுநர் பதவி விலக வேண்டும் எனவும் வரலாற்று தீர்ப்பு எனவும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்றும் நியமனப் பொறுப்பில் உள்ளவருக்கு குறிப்பிட்ட அதிகாரம்தான் உள்ளது என்றும் கூறி வந்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.

முத்தரசன் (இந்திய கம்யூ.): உச்ச நீதிமன் தீர்ப்பு மாநில உரிமைகளை நிலைநாட்டி, ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது.

சண்முகம் (மார்க்சிஸ்ட்): உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மாநில உரிமையை பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழ்நாடு அரசை பாராட்டுகிறோம். குடியரசு தலைவர் தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக நீக்க வேண்டும்.

வீரமணி(திராவிட கழகம்): தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதே என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் இன்றையத் தீர்ப்பு அமைந்துள்ளது. எனவே ஆளுநரை, குடியரசுத் தலைவர் ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும். முதலமைச்சரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

வைகோ (மதிமுக): ஆளுநர் ஆர் என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்.

காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்):
இந்திய உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் ஆளுநர் பற்றிய தீர்ப்பு, உச்சியில் வைத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் காலமெல்லாம் கொண்டாடும்படியான அற்புத தீர்ப்பாகிவிட்டது.

ராமதாஸ் (பாமக): இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இதன் மூலம் மாநில அரசின் மாண்பு பாதுகாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்ப வேண்டும்

வேல் முருகன் (வாழ்வுரிமை கட்சி):தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக சர்வாதிகாரி போன்று செயல்பட்டு வந்த ஆளுநருக்கு சாட்டையடி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, ஆர்.என்.ரவியை ஆளுநர் பதவியிலிருந்து இந்திய குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): அரசியல் நோக்கத்திற்காக ஆளுநர் பதவியை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியாக தெளிவாகிறது. எனவே தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

இத்தீர்ப்பின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்களின் வேந்தராக பொறுப்பேற்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள். திராவிட முன்னேற்றக் கழக அரசின் சட்ட போராட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விடிவு காலம் பிறந்துள்ளது. தெற்கிலிருந்து மாநிலங்களின் உரிமைகளை தூக்கி படிக்கும் மற்றொரு சூரியன் உதயமாகியுள்ளது.

The post 10 சட்ட மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்; ஆளுநர் பதவி விலக வேண்டும்: வரலாற்று தீர்ப்பு என தலைவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article