மல்லசமுத்திரம், ஜன.22: மல்லசமுத்திரம் பகுதியில் ஏற்கனவே 10 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த இளம்பெண், மீண்டும் கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் குடும்ப நலத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சி தெற்கு காட்டுக்கொட்டாய் பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபி(40). கூலி தொழிலாளியான இவரது மனைவி சங்கீதா(34). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சங்கீதா அடுத்தடுத்து 10 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில், ஒரு குழந்ைத இறந்து விட்டது. மேலும், ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு தத்து கொடுத்துள்ளனர். தற்போது இந்த தம்பதி 2 பெண் குழந்தைகள் மற்றும் 5 ஆண் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், சங்கீதா மீண்டும் கர்ப்பமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் சங்கீதாவிடம் பேசி, மீண்டும் குழந்தை பெற்றால் உடல்நிலை மோசமாகி விடும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கருகலைப்புக்கு சம்மதித்து, மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகதார நிலையத்திற்கு கடந்த 18ம் தேதி சென்று, மருத்துவரை அணுகி மாத்திரை வாங்கி சாப்பிட்டார். 48 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, வழக்கம்போல் மாத்திரை சாப்பிட மறுத்து விட்டார். மேலும், கர்ப்பத்தையும் கலைக்க மாட்டேன் என தெரிவித்து விட்டார். இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் உமாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, மல்லசமுத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் பிரசாந்த் போலீசில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து சங்கீதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ‘சங்கீதா ஏற்கனவே 10 குழந்தைகளையும் வீட்டிலேயே பெற்றுள்ளார். கர்ப்ப காலத்தில் மருத்துவமனை பக்கமே செல்ல மாட்டார். தற்போது, கர்ப்பத்தை கலைக்க விருப்பம் தெரிவித்து மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால், மறுபடியும் மாத்திரையை சாப்பிடாமல், மருத்துவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்து, 2 செவிலியர்கள் பாதுகாப்போடு சங்கீதாவை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கவுன்சலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்,’ என்றனர்.
The post 10 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் மீண்டும் கர்ப்பம் appeared first on Dinakaran.