10 ஆயிரம் பேர், காவலரின் துப்பாக்கி பறிப்பு... வக்பு வன்முறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

1 day ago 3

கொல்கத்தா,

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்டம் நிறைவேறியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 11-ந்தேதி பெரிய அளவில் போராட்டம் நடந்தது.

அதில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், வன்முறை பாதித்த சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில் தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்டனர். வன்முறைக்கு மொத்தம் 3 பேர் பலியானார்கள்.

இந்நிலையில், வன்முறை தொடர்பாக முர்ஷிதாபாத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், முர்ஷிதாபாத்தில் தந்தை மற்றும் மகன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரும் அடங்குவர்.

இந்த சூழலில், வன்முறை பற்றி மாநில ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை ஒன்றாக திரண்டனர். அவர்களில் ஒரு பிரிவினர் தனியாக பிரிந்தனர். இதில், 5 ஆயிரம் பேர் உமர்பூர் நோக்கி முன்னேறி சென்று தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் திடீரென மூர்க்கத்தனத்துடன் நடந்து கொண்டதுடன், ஆபாச வார்த்தைகளால் பேசினர். செங்கற்கள் மற்றும் கற்களை எடுத்து போலீசார் மீது வீசினர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த கும்பல் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியையும் பறித்து கொண்டனர்.

அவர்களிடம் கொடிய ஆயுதங்களும் இருந்தன. இதனால், வன்முறையை கட்டுப்படுத்த சென்ற போலீசார், அவர்களுடைய அதிகாரிகளை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Read Entire Article