தியாகராஜநகர்: நெல்லை மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் 2ம் பருவ பயிற்சி புத்தகம் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவ – மாணவிகள் கல்வி ஆர்வத்தை மேம்படுத்த எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு பருவம் வாரியாக வழங்கப்படுகிறது. மேலும் இதை எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்த ஆசிரியர்களுக்கான கைப்புத்தகமும் தயாரித்து வழங்கப்படுகிறது. தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் 1 முதல் 5ம் வகுப்பு பயணி மாணவர்களுக்கு 2ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம், சம்பந்தப்பட்ட மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. மாணவர்கள் பயிலும் நடைமுறைக்கு ஏற்ப ஆங்கில வழி பாட புத்தகம் மற்றும் தமிழ் மொழி பாட புத்தகங்கள் பாடவாரியாக தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன.
வகுப்புகளின் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப அதிகபட்சம் 40 செட் பாட புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இப்பாடப்புத்தகங்களை அந்தந்தப் பள்ளிகளுக்கு தேவையான பாட புத்தக எண்ணிக்கைக்கு ஏற்ப நோடல் மையங்களில் இருந்து அனுப்பிவைக்கும் பணி நேற்று துவங்கியது. பாளையங்கோட்டை மேரியார்டன் மேல்நிலைப் பள்ளியில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கியது. இப்பணிகளை அனைவருக்கும் கல்வித்திட்ட அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர். இந்த பாடப்புத்தகங்களை காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் முதல்நாளிலேயே வழங்கி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2ம் பருவ பயிற்சி புத்தகம் தயார்: பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.