கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள வெட்டிபெருமாளகரம் என்ற கிராமத்தில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான நாட்டுக்கோழிப் பண்ணை நடத்தி வருகிறார் ராஜா என்ற இளைஞர். அரசு வேலைக்கு முயற்சித்த இவர் தற்போது இந்தக் கோழி வளர்ப்பின் மூலம் செழிப்பான வருமானத்தைப் பெற்று வெற்றி நடை போடுகிறார். ஒரு காலை வேளையில் ராஜாவைச் சந்தித்தோம். “டிப்ளமோ ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துவிட்டு, சென்னை விமான நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றேன். அதன்பிறகு அரசு வேலையில் சேர்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்தேன். எதுவும் பலிக்காததால் எங்களது விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்கலாம் என முடிவு செய்தேன். இதற்காக சுமார் ஒரு வருடமாக கோழி வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று கோழி வளர்ப்பு, நோய்த் தாக்குதல், இறைச்சி, முட்டை வணிகம், தீவனத் தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து அறிந்துகொண்டேன். இந்த பாலபாடங்களைக் கொண்டு கடந்த 2011ல் முதன்முதலாக சிறிய மாட்டுக்கொட்டகையில் 500 கோழிக்குஞ்சுகளுடன் பண்ணையை ஆரம்பித்து இறைச்சி, முட்டை விற்பனையில் ஈடுபட்டேன். லாபம், நட்டம் என இரண்டையும் பார்த்தேன். அதன்பிறகு 100, 100 ஆக கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்த்ததுடன், இடத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அகலப்படுத்தினேன். கோழிகளையும், முட்டைகளையும் சின்ன சேலம் வாரச்சந்தை மற்றும் கள்ளக்குறிச்சி உழவர் சந்தைகளில் விற்பனை செய்வேன். எனது பண்ணையில் ஒரு கோழி சுமார் 2 கிலோ எடை வரை வளரும். உயிருள்ள நாட்டுக்கோழியை ஒரு கிலோ ரூ.300 என விற்பனை செய்தேன். இறைச்சியை ஒரு கிலோ ரூ.400க்கு கொடுத்ததுடன், 4 முட்டைகளையும் இலவசமாக கொடுத்தேன். அதேபோல ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சுகளை ரூ.25, ஒரு மாத கோழிக்குஞ்சுகளை ரூ.100 என்ற விலையில் விற்று வந்தேன். இப்படியாக பண்ணை விரிவடைந்தது.
பண்ணையை மேலும் விரிவுபடுத்த பல்லடம், திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இருந்து அசில் கிராஸ் எனப்படும் நாட்டுக்கோழிகளை வாங்கி வளர்த்தேன். ஆனால் இந்த அசில் கிராஸ் நாட்டுக்கோழியை மக்கள் விரும்பவில்லை. இதனால் அனுபவமுள்ள விவசாயிகளிடம் ஆலோசனை கேட்டு ஒரு முடிவுக்கு வந்தேன். அதன்படி கடந்த 2014ல் கிராமங்களுக்கு நானே நேரடியாக சென்று எனக்கு பிடித்தது போல் சுமார் 200 சேவல், 300 பெட்டைக்கோழிகளை வாங்கி வந்து, முறையான தடுப்பூசிகளைப் போட்டு வளர்த்தேன். அந்தக் கோழிகள் முட்டை இட்டபோது சேலத்திற்கு எடுத்துச்சென்று வாடகை முறையில் இன்குபேட்டர் இயந்திரத்தில் வைத்து குஞ்சு பொரிக்க வைத்தேன். இதன்மூலம் கோழிகுஞ்சுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இரண்டு சின்ன ஷெட், இரண்டு பெரிய ஷெட் என 4 கொட்டகைகள் உருவானது. சின்ன ஷெட்டில் தாய்க் கோழிகளையும், பெரிய ஷெட்டில் குஞ்சுக் கோழிகளையும் வளர்த்தேன். கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயபாளையம் போன்ற ஊர்களில் உள்ள கறிகோழி கடைகளுக்கும் சென்று விற்றேன். சின்ன சேலம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் கறிக்கடை தொடங்கினேன். இறைச்சி வாங்க விரும்பியவர்கள் வி.பி அகரத்தில் உள்ள எங்களது பண்ணைக்கும், சின்னசேலத்தில் உள்ள எங்களது கறிக்கடைக்கும் வந்து வாங்கி சென்றனர். அதுமட்டுமல்லாமல் கோழி வளர்க்க ஆசைப்பட்ட கிராமப்புற, நகர்ப்புற மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப 50, 100 என விரும்பி வாங்கி சென்றனர்.இந்த நிலையில் கடந்த 2017ல் கோழிப்பண்ணையை மேலும் பெரிய அளவில் விரிவுபடுத்த எண்ணி வங்கிக்கடன் பெற்று ரூ.15லட்சம் மதிப்பில் குஞ்சு பொரிக்கும் இன்குபேட்டர் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்களை வாங்கினேன். இதனால் ஒரு வாரத்திற்கு 2 ஆயிரம் குஞ்சுகள் பொரித்தன. பொரித்த குஞ்சுகளை நாள் அடிப்படையில் விற்பனை செய்கிறேன். இதுதவிர வழக்கம்போல் உயிர்க்கோழி, இறைச்சி, முட்டை ஆகியவற்றையும் விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ஒரு நல்ல தொகை வருமானமாக கிடைக்கிறது. அரசு வேலைக்கு முயற்சித்து விரக்தி அடைந்த நான் இப்போது திருப்தியாக உணர்கிறேன்’’ என நெகிழ்ச்சியாக
பேசுகிறார்.
தொடர்புக்கு:
ஆர்.ராஜா: 95000 70157.
*எங்களது பண்ணையில் முட்டையும் விற்பனை செய்கிறோம். ஒரு முட்டையின் விலை ரூ.15. சிலர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாட்டுக்கோழிகளின் முட்டைகளுடன் சேர்த்து கூடுதலாக அவையம் வைக்க விரும்புவார்கள். அவர்களுக்கும் நாங்கள் முட்டைகள் வழங்குகிறோம்.
*கோழிகளுக்கு ராணிக்கெட் எனப்படும் வெள்ளைக் கழிசல் நோய் வரும். இந்த நோயை சரிசெய்ய 5வது நாளில் எப்1 அல்லது பி1 எனப்படும் சொட்டு மருந்து போட வேண்டும். 14வது நாள் என்டிகில் எனப்படும் மருந்தும் போடவேண்டும். 30வது நாள் மற்றும் 77வது நாட்களில் லசோட்டோ என்ற மருந்து கொடுக்க வேண்டும். 84வது நாள் குடற்புழு நீக்கம் செய்ய என்டிகில்டு மருந்து 0.5 மிலி செலுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் ஆரோக்கியமான கோழிகளாக வளரும்.
The post 1.5 ஏக்கரில் நாட்டுக்கோழிப்பண்ணை!.. சாதித்துக் காட்டும் கிராமத்து இளைஞர் appeared first on Dinakaran.