ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது

1 month ago 22

சென்னை, செப்.29: மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று, சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியை செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கன்டெய்னரில் வரும் சரக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பது இந்த நிறுவனத்தின் பிரதான வேலை.இந்த நிலையில், பெங்களூருவை சேர்ந்த ஒரு பிரபல தனியார் நிறுவனத்திற்கு, சீனாவில் இருந்து 40 அடி கன்டெய்னரில் லேப்டாப், நோட்பேட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கன்டெய்னரில் வைத்து, கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 7ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது.

பெங்களூருவை சேர்ந்த நிறுவனம், கன்டெய்னரை ஏற்றி வர கடந்த 11ம் தேதி டிரைலர் லாரியை அனுப்பியது. இந்த டிரைலர் லாரி டிரைவர், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் யார்டுக்கு சென்று பார்த்த போது கன்டெய்னரை காணவில்லை. இதையடுத்து, பெங்களூவை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை கையாளும் மயிலாப்பூர் தனியார் நிறுவன உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ₹35 கோடி மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்த கன்டெய்னர் எங்கே போனது என விசாரித்துள்ளனர்.இதையடுத்து, இது தொடர்பாக மயிலாப்பூர் நிறுவன ஆபரேஷன் மேலாளர் இசக்கியப்பன், சென்னை துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கன்டெய்னர் டிராக்கிங் ரிப்போர்ட்டை ஆய்வு செய்தபோது, வேறொரு ட்ரெய்லரில் ₹35 கோடி மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்கள் இருந்த கன்டெய்னர் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் மைலாப்பூர் நிறுவனத்தில் பணியாற்றும் இளவரசன் என்பவர் திருட்டுக் கும்பலுடன் சேர்ந்து இந்த மோசடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், திருவள்ளூர் மணவாளன் நகரில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்த கன்டெய்னரை மீட்டனர். அதில் இருந்த 5,207 லேப்டாப்புகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக டிரைலர் லாரி உரிமையாளர் திருவள்ளூர் மணிகண்டன் (30), லாரிகளை ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்கள் திருவொற்றியூர் ராஜேஷ் (39), நெப்போலியன் (46), சிவபாலன் (46), திண்டுக்கல் முத்துராஜ் (46), டிரைலர் லாரி டிரைவர் விழுப்புரம் பால்ராஜ் (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட மயிலாப்பூர் நிறுவன ஊழியர் இளவரசன், சங்கரன், டாக்குமென்ட் தயாரிப்பாளர் விக்கி ஆகிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தண்டையார்பேட்டையை சேர்ந்த சென்னை மாநகர பேருந்து டிரைவர் சங்கரன் (56), நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், முத்துராஜ் என்பவர், துறைமுகத்திலிருந்து சில பொருட்களை கடத்த வேண்டி இருப்பதால் கன்டெய்னர் தேவைப்படுகிறது. இதை ஏற்பாடு செய்தால் ₹5 லட்சம் தருவதாக கூறினார். பணத்துக்கு ஆசைப்பட்டு, கன்டெய்னரை ஏற்பாடு செய்து கொடுத்தேன், என கூறியுள்ளார். இதையடுத்து, சங்கரனை புழல் சிறையில் அடைத்தனர்.

The post ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article