ஹைப்பர் – லோக்கலை இணைக்கும் கின்!

3 hours ago 3

நன்றி குங்குமம் தோழி

உலகமே நம் கைக்குள். ஒரு பட்டனைத் தட்டினால் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த செய்திகளை செல்போன் திரையில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் யுகத்தில் உலக நடப்புகள் மட்டும் தெரிந்து வைத்திருக்காமல் நம் பக்கத்துத் தெருவில் நடக்கும் நிகழ்வுகளையும் தெரிந்து கொள்வதற்கு வசதியாக ஆப் ஒன்றினை அறிமுகம் செய்திருக்கிறார் காயத்ரி தியாகராஜன். சென்னையை சேர்ந்த இவர் ‘kyn’ என்ற பெயரில் ஆப் ஒன்றை துவங்கியுள்ளார்.

‘‘நான் பக்கா சென்னைப் பொண்ணு. படிப்பு முடிச்சிட்டு சென்னையில் இரண்டு வருஷம் வேலை பார்த்தேன். அதன் பிறகு சிங்கப்பூர், லண்டன், நியூயார்க், சுவிஸ் என பல நாடுகளில் வேலை பார்த்தேன். அதில் லண்டனில் உள்ள பிரபல நிதி நிறுவனத்தில் டேட்டா துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தேன். அப்போது கோவிட் தாக்கியது. நிலமை சீரானதும், இந்தியாவிற்கு வந்துட்டேன். வெளிநாட்டில் இருந்த 25 வருஷம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

தெரியாத ஊரு, மொழி, மக்கள் என்று ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் நல்ல அனுபவமாக இருந்தது. அந்த அனுபவம் பெண்களின் நலன் சார்ந்த வேலையில் ஈடுபட செய்தது. மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்டம் ஒன்றை செயல்படுத்தினேன். வேலை பார்த்து வந்த பெண்கள் குழந்தைப் பிறப்புக்காக வேலையில் இருந்து விடுப்பட்டு இருப்பார்கள். ஐந்து, ஆறு வருடம் கழித்து மீண்டும் வேலைக்குப் போக விரும்புவாங்க. அவர்கள் மீண்டும் வேலைக்கு சேர்வதற்கான பயிற்சி அளித்து வந்தோம்.

இதற்கிடையில் வெளிநாடு வாழ்க்கை போதும் என்று சென்னையில் செட்டிலாயிட்டோம். இங்கு வந்த பிறகு என்ன செய்வதுன்னு யோசித்தேன். 90களில் நாம் படிக்கும் காலத்தில் செல்போன் கிடையாது. மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்று தினசரி அல்லது தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொள்வோம். அதுவே நான் லண்டனில் வசித்த போது இந்தியாவில் நிலவும் நிலவரங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தினேன்.

ஆனால் இன்று உலகம் முழுதும் செல்போன் வடிவில் நம் கைக்குள் அடங்கிவிட்டது. உடனடியாக செய்திகளை இதன் மூலம் அறிந்து கொள்ளும் நமக்கு பக்கத்து வீட்டில் அல்லது அடுத்த தெருவில் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்வுகள் குறித்து தெரிவதில்லை. சின்ன வயசில் நான் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் விளையாடி இருக்கிறேன். அவங்க வீட்டில் யார் இருக்கிறார்கள், என்ன வேலை செய்கிறார்கள், ஏன் அந்த வீட்டுப் பெண் நல்லா பாடுவான்னு கூட சொல்வோம்.

ஆனால் இன்று அப்படி இல்லை. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தாலும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் பேசுவதில்லை. பிள்ளைகளை கூட அடுத்த வீட்டில் விளையாட அனுமதிப்பதில்லை. செல்போனுடன்தான் வாழ்கிறோம். இந்த நிலை தொடர்ந்தால், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலே போய்விடும். மக்களிடம் அவர்களைச் சுற்றி நிகழும் விஷயங்களை எப்படி கொண்டு செல்வது என்று யோசித்தேன். அடையாரில் இரண்டாவது தெருவில் சங்கீத கச்சேரி நடக்கிறது என்று அந்தப் பகுதி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு பிளாட்ஃபார்ம் அமைக்க திட்டமிட்டேன். அதன் உருவம் தான் kyn’’ என்றவர், அதன் செயலாக்கம் குறித்து விவரித்தார்.

‘‘இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் தனக்கென அடையாளம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். கோவிட்டிற்கு பிறகு பல பெண்கள் தொழில்முனைவோர்களாக மாறி இருக்கிறார்கள். வயர்கூடை, கேக், சமையல் என பல விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அதனை பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்ய முடிவதில்லை. வசதியுள்ளவர்கள் சமூக வலைத்தளத்தில் இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் விளம்பரம் செய்கிறார்கள். அப்படியே அதன் மூலம் விளம்பரம் செய்தாலும், ஃபாலோவர்களை இணைப்பது சுலபமான விஷயம் கிடையாது. நம் முதல் வாடிக்கையாளர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்தான். அவர்களை நெருங்கிவிட்டால், எங்கும் சென்றுவிடலாம்.

அதற்கான பிளாட்ஃபார்மினை இந்த ஆப் மூலமாக அமைத்திருக்கிறோம். கின்னைப் பொறுத்தவரை முதலில் நீங்க வசிக்கும் இடத்தைச் சுற்றி என்ன நடக்கிறதுன்னு தெரிந்து கொள்ளணும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போகும் போது, அங்கு டிராபிக் நிலவரம் தெரியணும். உங்க ஏரியாவில் திறக்கப்பட்டிருக்கும் புது கடை, நிகழ்வுகளும் அறிந்திருக்கணும். முன்பு பண்டிகை காலத்தில் புது உடை எடுக்க தி.நகருக்கு செல்வோம்.

இன்று அங்குள்ள பெரிய கடைகள், உணவகங்கள் எல்லாம் அனைத்து ஏரியாவிலும் கிளையினை திறந்துவிட்டார்கள். நாம் வசிக்கும் இடத்திலேயே விரும்பிய கடையில் ஷாப்பிங் செய்ய முடிகிறது. அதே போல் பீச், பொருட்காட்சி, சினிமா மட்டுமே பொழுதுபோக்காக இருந்த காலம் மாறிவிட்டது. ஸ்டான்டப் காமெடி, உணவுத் திருவிழா, இசைக் கச்சேரி, உடைக்கான கண்காட்சி என மக்களின் பொழுதுபோக்கு விருப்பமும் மாறிவருகிறது. இந்த நிகழ்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் எங்க வேலை.

சென்னையில் உள்ள அனைத்துப் பகுதியிலும் நடைபெறும் மாரத்தான், கண்காட்சி, கச்சேரி, உணவுத் திருவிழா, ஷாப்பிங் பஜார், குழந்தைகளுக்கான ஆக்டிவிட்டி என அனைத்தும் குறித்த செய்திகள் இங்கு கிடைக்கும். வார இறுதிநாட்களில் என்ன செய்யலாம் என்று ேயாசிப்பவர்களுக்கு இது பயனுள்ள ஆப். எல்லாவற்றையும் விட தொழில் முனைவோர்களுக்கு மிகவும் பயனுள்ள பிளாட்ஃபார்ம். அவர்களின் பொருட்களை பதிவு செய்வதால், சென்னை முழுக்க வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்’’ என்றவர் இதில் உள்ள அம்சங்களை விவரித்தார்.

‘‘கின்… அக்கம் பக்கம் நிகழ்வுகள், தொழில் வளர்ச்சிக்கானது மட்டுமில்லை. சமூகத்துடன் தொடர்பு ஏற்படுத்தவும் உதவும். உதாரணத்திற்கு கூடைப்பந்து விளையாட இரண்டு நபர்கள் தேவையாக இருக்கும். அவர்களை இதன் மூலம் தொடர்பு ெகாள்ளலாம். ஒவ்வொரு விளையாட்டிற்கும் அந்தந்த ஏரியாவில் ஒரு குழு இருக்கும். அதனை தொடர்பு கொண்டு உங்களின் தேவையை தெரியப்படுத்தலாம். நட்பு வட்டாரமும் பெருகும். விளையாட்டு சார்ந்து மட்டுமில்லாமல் கணபதி பூஜை செய்பவர்கள் முதல் கல்யாண புரோக்கர் வரை அனைவரும் தங்களின் பிசினஸ் வளர்ச்சிக்காக இதில் பதிவு செய்கிறார்கள்.

எல்லோருக்கும் ஒரு தேவை இருக்கு. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தொழில் செய்பவர்கள் அதில் மார்க்கெட்டிங் செய்ய தெரிந்து கொள்வது அவசியம். இந்த ஆப்பினை யார் வேண்டும் என்றாலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதன் பிறகு அதில் உங்களுக்கு தேவையான பகுதியினை தேர்வு செய்யலாம். இதன் மூலம் அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த செய்தி உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். செய்திகள் மட்டுமில்லாமல் கின் எக்ஸ்க்ளூசிவ் என்ற பகுதி மூலம் மக்களுக்கு பயனுள்ள வீடியோக்களையும் பதிவு செய்கிறோம்.

வெளியே தெரியாத பல ஹீரோக்கள், சத்தமில்லாமல் நல்ல விஷயங்களை செய்வார்கள். அவர்களை எக்ஸ்க்ளூசிவ் பகுதியில் பார்க்கலாம். அதில் ஒன்றுதான் டாக்குமென்டரி மற்றும் ஷார்ட் பிலிம் போட்டி. தேர்வான 40 குறும் படங்களை இதில் பதிவு செய்திருக்கிறோம். ஐந்து நிமிட குறும் படம் என்பதால், நல்ல ஒரு பொழுதுபோக்காக இருக்கும். சென்னை ஆன் பிளேட்ஸ் பகுதியில் செஃப் தீனா சென்னையின் சிறப்பு உணவுகளான ராயபுரம் அட்டலப்பம், ஜன்னல் கடை பஜ்ஜி… அந்த இடத்துக்கு சென்று சுவைத்து அதை அவர் சமைக்கும் வீடியோ. ஃபிட்நெஸ் விரும்புபவர்களுக்கு ஜிம்மிற்கு மாற்றான சிலம்பம் போன்ற பயிற்சிகள். மெட்ராஸ் சிங்காரி, லோக்கல் ஏரியா பற்றிய ஷாப்பிங். அதாவது, ஹீராமண்டி வெப்சீரிசில் அணிந்திருந்த உடை மற்றும் நகைகளை சென்னை ரங்கநாதன் தெருவில் ரீகிரியேட் செய்வது குறித்த பதிவு. எந்த இடத்தில் எப்படி ஷாப்பிங் செய்யலாம்னு சொல்லித் தருகிறோம்.

இது தவிர மாசம் ஒரு பகுதியினை தேர்வு செய்து திருவிழா மாதிரி செய்கிறோம். அங்கு உங்களின் திறமையை வெளிப்படுத்தலாம். பாடலாம், ஆடலாம், மிமிக்கரி என அனைத்தும் செய்யலாம். அதில் அந்தப் பகுதியில் உள்ள தொழில்முனைவோர்கள் ஸ்டால் அமைத்து தங்களின் பிசினசை விரிவுப்படுத்தலாம். இந்த ஆப் ஆரம்பித்து ஒரு வருடமாகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை பதிவு செய்கிறோம். கிளப்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் எந்தப் பகுதியில் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்பது குறித்த செய்தியை எங்களால் சேகரிக்க முடிகிறது. சென்னையில் முழுமையாக கால் பதித்த பிறகு கோவை, மதுரை என தமிழகத்தை தொடர்ந்து பெங்களூர் போன்ற மற்ற நகரத்திற்கும் செல்ல இருக்கிறோம். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை எங்கள் மூலம் இணையுங்கள் என்பதுதான் எங்களின் தாரக மந்திரம்’’ என்கிறார் காயத்ரி.

தொகுப்பு: ஷம்ரிதி

The post ஹைப்பர் – லோக்கலை இணைக்கும் கின்! appeared first on Dinakaran.

Read Entire Article