ஹேப்பி மாம் = குயின் மாம்!

1 month ago 10

நன்றி குங்குமம் தோழி

பெண்களின் வாழ்க்கை முறை ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக்கொண்டேயிருக்கும். வாழ்வில் நடக்கும் யதார்த்தங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டே இருப்பார்கள். திருமணம், குழந்தைகள் என்று வந்ததும், கூடுதல் பொறுப்பு மற்றும் தியாகங்கள் அவர்களுக்கே உரித்தானதாகிடும். குடும்பம் என்ற வாழ்க்கைப் பயணத்தில் தனக்கான சுய அன்பு, நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் தங்களின் அடையாளத்தையே இழந்து கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களின் வாழ்வை வளமாக மாற்ற முன் வந்திருக்கிறார் ரம்யா சுந்தர். இவர் ‘ஹேப்பி மாம் ஹப்’ (Happy Mom Hub) என்ற சமூகத்தின் தலைவராகவும், ஹேப்பினஸ் கோச்சாகவும் வலம் வருகிறார். “ஒரு லட்சம் பெண்களின் வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டு வருவதுதான் என் இலக்கு” என்று பேசத் தொடங்கினார் ரம்யா. “நான் ஒரு தாயானதும், எனக்கு ஏற்பட்ட போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன் என் வாழ்வில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. என் குழந்தை குறிப்பிட்ட பிரசவ தேதிக்கு முன்பே பிறந்துவிட்டான். அதனால் அவன் மீதே அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. தூக்கமின்மை, பதட்டநிலை காரணமாக எனக்கு உடலில் பிரச்னைகள் ஏற்பட்டது.

எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் வரும். உடல் எடை அதிகரித்தது. மற்றவர்களையே சார்ந்திருக்கிறேன், உடல் எடை காரணமாக அசிங்கமாக இருக்கிறேன் என்று தோன்றும். ஆனால் இந்த எண்ணம் ஏன் ஏற்படுகிறது என்று தெரியாது. என்னுடைய டாக்டர் யாரும் போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன் குறித்து எனக்கு அறிவுரை சொல்லவில்லை. எனக்கு யாரும் சப்போர்ட் செய்யவில்லை, அக்கறை காட்டவில்லை போன்ற எண்ணங்கள்தான் அதிகமாக இருந்தது. ஒரு வேளை நான் மீண்டும் வேலைக்கு சென்றால் இந்த நிலை மாறும் என்று வேலையில் சேர்ந்தேன். ஆனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. வேலை நேரத்தில் வீட்டை பற்றியும் வீட்டில் இருக்கும் ேபாது வேலை பற்றிய சிந்தனையாக இருக்கும். என்னால் வேலை, குடும்ப வாழ்க்கை இரண்டையும் சமமாக கவனிக்க முடியவில்லை. என் பதட்ட நிலையை பார்த்து என் கணவர் முதல் என் பாஸ் வரை எல்லோரும் ‘நீ சரியில்லை’ என்றார்கள். அதை என்னால் உணர முடிந்தது. காரணம், ரம்யாவின் அர்த்தம் பெர்பெக் ஷன். ஒரு தன்னம்பிகையான சுறுசுறுப்பான பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்தேன். குழந்தை பிறந்ததும் ஏற்பட்ட இந்த மன அழுத்தத்தால் எல்லாமே தலைகீழாக மாறியது.

இது மட்டுமில்லாமல் எனக்கு ஆட்டோ இம்யூன் நோயும் இருந்தது. அதுவும் என்னை பெரிய அளவில் பாதித்தது. இந்தப் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறினேன். தாயாக, மனைவியாக, சிறந்த ஊழியராக தோல்வியடைந்து விட்டேன் என்ற நிலையை மாற்ற நினைத்தேன். பிரச்னை என்னிடம்தான் உள்ளது. நானே என்னை தாழ்வாக நினைத்துக்கொள்கிறேன் என்பதும் எனக்கு புரிந்தது. இந்த நிலை மாற நான் என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். மன அமைதிக்கான பயிற்சியில் ஈடுபட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னை நான் மீட்டெடுத்தது போல் உணர்ந்தேன். உடல் எடையும் குறைந்தது. எனக்கிருந்த ஆட்டோ இம்யூன் பிரச்னையும் தீர்ந்தது. எல்லாமே மேஜிக் போலத்தான் இருந்தது. எனக்கே என்னை பிடிக்க ஆரம்பித்தது. எனக்கு ஆலோசனை சொன்ன உணவியல் நிபுணர் மூலமாக மற்ற தாய்மார்களிடம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதில் பெரும்பாலானவர்கள் என்னோட அதே பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போதுதான் நான் என்னை மீட்டது போலவே அவர்களை மீட்டெடுக்க உதவினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. இது போன்ற பிரச்னைகளை சந்திக்கும் பெண்களைக் கொண்டு ஒரு குழு அமைத்தேன்.

அப்படித்தான் ஹேப்பி மாம் ஹப் உருவானது” என்றவர், அவர் தொடங்கிய கம்யூனிட்டியை பற்றி பகிர்ந்தார். “எங்கள் கம்யூனிட்டியில் உள்ள பெண்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலா இருப்பாங்க. அதற்கு காரணம் நான் அவர்களுக்கு சின்னச் சின்ன ஆலோசனைகளை வழங்கினேன். நமக்கான சுய அன்பை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மை நாமே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். என்னுடைய கடின நாட்களில் என்னை குறை தான் சொன்னார்களே தவிர யாரும் எனக்கான பிரச்னைக்கு உறுதுணையாக இல்லை. அதனால் நான் என் சமூகப் பெண்களை இவர்கள் இப்படித்தான் என்று ஜட்ஜ் செய்வதில்லை. அதனால் ஒருவரின் பிரச்னைகளை மற்றொருவரால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த சமூகத்தில் பெரும்பாலும் பிரச்னையுள்ள தாய்மார்கள், உறவுமுறையில் சிக்கல் உள்ளவர்கள், சுய அன்பில்லாதவர்கள், விவாகரத்து சிக்கலில் உள்ளவர்கள், போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷனில் உள்ளவர்கள், உடல் சார்ந்த பிரச்னைகளில் இருப்பவர்கள் குறிப்பாக ஆட்டோ இம்யூன் பிரச்னை உள்ளவர்கள்தான். அதிகமாக கோபப்படுவது, குழந்தைகளை அடிப்பது, கணவருடன் பிரச்னை, வேலையில் முன்னேற்றமில்லை போன்ற பல பிரச்னைகள் அவர்களுக்கு இருக்கும்.

இதற்கான தீர்வு நான் அளிக்கும் பயிற்சியை முறையாக பின்பற்றவேண்டும். அது அவர்களை நேர்மறையாக சிந்திக்க வைக்கும். இதன் மூலம் தன்னம்பிக்கை, நன்றியுணர்வுடன் இருப்பது, அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குவது, அவர்களின் உடல் மொழிகளை புரிந்து கொள்வது, வாழ்வின் மீது நம்பிக்கையாக இருப்பது, குற்ற உணர்விலிருந்து வெளியேறுவது, அதீத யோசனையிலிருந்து விடுபடுவது, ஒர்க்-லைஃப் பேலன்ஸ் செய்வது போன்றவற்றை கற்றுக்கொள்வார்கள். இதை கற்றுக் கொண்டால் பிரச்னைகள் வராது என்று சொல்லமாட்டேன். பிரச்னைகள் வந்தால் அதனை சந்தித்து எவ்வாறு முன்னேறுகிறார்கள் என்பதுதான் முக்கியம். நிறைய பெண்களுக்கு அவர்களுக்கு இருக்கும் பிரச்னை பற்றிய விழிப்புணர்வே இருப்பதில்லை. உதாரணமாக எப்போதும் எரிச்சலாக இருப்பார்கள். ரத்தப் பரிசோதனை செய்தால், விட்டமின் டி குறைபாடு இருக்கும். இது ஒரு சிறிய காரணம் என்றாலும், அடிப்படையான சிலவற்றை புரிந்துகொண்டாலே அவர்களுக்கான பிரச்னைகளிலிருந்து வெளியில் வர முடியும். யாரும் எனக்கு உதவ இல்லை. ஆதரவாக இல்லை என்றெல்லாம் புலம்புவதை தவிர்த்துவிட்டு உங்களின் மனநிலையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

உங்களை நீங்கள் நேர்மறையாக வைத்திருந்தால் உங்களை தேடி வரும் பிரச்னைகள் தானாக விலகிப் போகும். எங்கள் கம்யூனிட்டியில் உள்ளவர்களை பிரச்னைகளுக்கு தகுந்தவாறு மொத்தம் 5 குழுக்களாக பிரித்துள்ளோம். ஒவ்வொரு குழுவிற்கும் வாட்ஸாப் குரூப் அமைத்து, அதன் மூலம் பிரச்னைக்கான தீர்வினை அளிக்கிறோம். யாராவது ஒருவர், ‘நான் இப்போது தாழ்வாக உணர்கிறேன்’ என்று மெசேஜ் செய்தால் போதும் குறைந்தது 10 பேராவது அவருக்கு உடனடியாக போன் செய்து ஆறுதலாக பேசி தீர்வினை அளிப்பார்கள். கம்யூனிட்டியில் சேர்பவர்கள் நான்கு நிலைகளை கடந்த பிறகுதான் அவரை ‘குயின் மாம்’ என்று அறிவிப்போம். முதல் நிலை ‘ஜாம்பீ மதர்’. மூன்று நாட்கள் பயிற்சியினை நிறைவு செய்ததும், ‘ஃபினிஷர் மாம்’ என்ற நிலைக்கு செல்வார். அடுத்து அவருடைய உடல் சார்ந்த பிரச்னைகளிலிருந்து மீண்டதும் ‘ஹேப்பி மாம்’ என்று அழைக்கப்படுவார். பின்னர் அவரின் கணவர் அல்லது குழந்தைகளிடம் சான்று பெற்ற பிறகு ‘லவ்விங் மாம்’ என்றாவார். இறுதியாக முழுமையாக முன்னேற்றமடைந்ததும் ‘குயின் மாம்’ என்று பட்டமளிப்போம்” என்றவர், அவரின் இலக்குகளையும் பகிர்ந்துகொண்டார்.“பெண்கள் அவர்களின் மதிப்பை தெரிந்துகொள்ள வேண்டும்.

அதில் தாய்மார்கள் சந்தோஷமானவாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏன் நமக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும், ஏன் சுய அன்பு அவசியம், ஏன் மனரீதியான பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் யோசித்து தங்களின் நலனில் பங்கெடுக்க வேண்டும். ஒருமுறை ஒர்க் ஷாப்பில் கலந்து கொண்டு பயனடைந்த ஒரு தாயின் குழந்தை என்னிடம் வந்து, ‘என் அம்மா இப்போதெல்லாம் என்னை அடிப்பதேஇல்லை’ என்று சொன்னான். அது எனக்கு மன நிறைவாக இருந்தது. ஒவ்வொரு தாய்மாரும் இந்நிலையை உணர்ந்து அவர்களை மீட்டுக்கொள்ள வேண்டும். அம்மா என்றாலே மெழுகுவர்த்தியை போல உருகிக்கொண்டே இருப்பார்கள் என்கிற பொதுவான சிந்தனை எல்லோரிடமும் உள்ளது. மெழுகுவர்த்தி ஒளி தந்து கொண்டே இருந்தாலும் இறுதியில் அது உருகி தன்னையே தியாகம் செய்யும். அகல் விளக்கென்றால் மீண்டும் திரி போட்டு எண்ணெய் ஊற்றி ஒளி வீசலாம். எனவே அம்மாக்கள் மெழுகு வர்த்தியாய் உருகாமல், அகல் விளக்காய் ஜொலிக்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை அமைக்க நாம் அப்படிப்பட்ட வாழ்க்கையை அவர்களுக்கு வாழ்ந்து காட்ட வேண்டும். நம்மிடமிருந்துதான் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்” என்றார் ரம்யா சுந்தர்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post ஹேப்பி மாம் = குயின் மாம்! appeared first on Dinakaran.

Read Entire Article