ஹெல்மெட்டுக்காக இளைஞரை மறித்த போக்குவரத்து போலீஸ்.. பரிதாபமாக பறிபோன உயிர்..! இந்த விபத்துக்கு யார் பொறுப்பு ?

2 weeks ago 4
சென்னை திருவொற்றியூர் - மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஸ்கூட்டரை வேகமாக திரும்பிய போது எதிரில் வந்த தண்ணீர் லாரிக்குள் சிக்கி இளைஞர் தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை மணலி புதுநகர் அடுத்த வெள்ளிவாயல்சாவடியை சேர்ந்த நண்பர்கள் கிரண் மற்றும் வினோத். இவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் சத்தியமூர்த்தி நகர் சென்று விட்டு திருவொற்றியூர் மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நண்பர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாமல் சென்ற நிலையில் சாத்தங்காடு பக்கிங்காம் ஓடை பாலத்திற்கு முன்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த செங்குன்றம் போக்குவரத்து காவல் துறையினர் ஸ்கூட்டரை மறித்ததாக கூறப்படுகின்றது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கிரண், போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க தங்கள் வாகனத்தை வலது புறமாக வேகமாக திருப்பிய போது எதிர் புறம் வந்த தண்ணீர் லாரியில் பயங்கரமாக மோதினர். இதில் வண்டியை ஓட்டிச்செனற கிரண் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் பின்னால் அமர்ந்திருந்த வினோத் முன் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார் லாரிக்கு அடியில் சடலமாக கிடந்த வினோத்தை தேடி வந்த அவரது நண்பர்கள் லாரிக்கு அடியில் அமர்ந்து கதறித்துடித்தனர் போக்குவரத்து போலீசார் மறித்ததால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த நிலையில் இந்த விவரம் தெரியாததால் , வினோத் இறந்த துக்கம் தாளாமல் நண்பர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர் சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கையில் காயமடைந்த கிரணை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினர். கிரண் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை தாங்கள் மறிக்கவில்லை என்றும் அந்த இளைஞர்களே, வாகனத்தை திருப்பிச்செல்ல முயன்று லாரியில் சிக்கியதாக அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்தனர். தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை உணர்ந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும், அதே நேரத்தில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை எதோ பார்டர் தாண்டி வந்த பயங்கரவாதியை மடக்குவது போல சாலையில் மறித்து .. விரட்டி.. போலீசார் கெடுபிடி காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக உள்ளது
Read Entire Article